புதிய முதலீடுகளில் தடம் பதிக்கும் எம்பிஐ குழுமம்: நிலையான வருவாயை ஈட்ட இலக்கு

21 ஏப்ரல் 2026, 2:04 AM
புதிய முதலீடுகளில் தடம் பதிக்கும் எம்பிஐ குழுமம்: நிலையான வருவாயை ஈட்ட இலக்கு

ஷா ஆலம், ஏப்ரல் 21: சிலாங்கூர் மந்திரி புசார் நிறுவனமான (எம்.பி.ஐ) மனை தொழில் துறையை மட்டும் சாராமல், பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய விரும்புகிறது.

அதன் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ டி.எஸ் சைபுல்யாசான் எம். யூசோப் கூறுகையில், நீடித்த வருமானத்தைப் பெறுவதற்கும், இந்த ஆண்டு இலாப இலக்கை அடைவதற்கு சாத்தியமான நிறுவனங்களைக் கையகப்படுத்தும் திட்டம் உள்ளதாகத் தெரிவித்தார்.

"எம்.பி.ஐ யில், நாங்கள் புதிய ஆற்றல்களைக் காண்கிறோம். நாங்கள் மனை தொழில் துறையை முழுமையாகச் சார்ந்திருக்க விரும்பவில்லை. எனவே,  சாத்தியமுள்ள சில நிறுவனங்களை நாங்கள் கையகப்படுத்த முயற்சிப்போம்."

"எம்.பி.ஐ எதிர்காலத்தில் நீடித்த வருமானத்தைப் பெறுவதற்காக இந்த நிறுவனங்களில் நாங்கள் முதலீடு செய்வோம். எங்களது இலக்கு RM6 பில்லியன் என்றாலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி RM8 பில்லியனை எட்டுவோம் என்று நம்புகிறோம்," என்று அவர் இன்று சித்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற எம்.பி.ஐ சிலாங்கூர் குழுமத்தின் நல்லிணக்க விழாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கு நெருக்கடியின் விளைவுகளுக்கு ஏற்ப எம்.பி.ஐ தற்போதைய சூழ்நிலையைச் சரி செய்து வருவதாகவும், மேலும் நீடித்த வணிக மாதிரிகள் மற்றும் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் சைபுல்யாசான் கூறினார்.

மாநிலத்தின் மூலோபாய முதலீடுகளை இயக்கும் ஒரு நிறுவனமாக, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு உதவுவதற்கும் வருமானத் தொடர்ச்சியை எம்.பி.ஐ தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

"இந்த வருமானத் தொடர்ச்சி, சிலாங்கூர் மக்களுக்கு எம்.பி.ஐ உருவாக்கும் இலாபத்தின் மூலம் தொடர்ந்து உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும்," என்றார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கில் நிலைமை மோசமடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியது.

தற்போது, உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கு முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி, அமெரிக்கா ஈரான் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான கடல் தடைகளை நீக்கும் வரை ஏப்ரல் 18 முதல் தெஹ்ரானால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.