சிறைக் கைதிகளை உற்பத்தித் திறன் கொண்ட உழைப்புச் சக்தியாக மாற்றச் சிலாங்கூர் அரசு திட்டம்

15 ஏப்ரல் 2026, 4:57 AM
சிறைக் கைதிகளை உற்பத்தித் திறன் கொண்ட உழைப்புச் சக்தியாக மாற்றச் சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், ஏப்ரல் 15 – சிறைக்கைதிகளை உற்பத்தித் திறன்மிக்க உழைப்புச் சக்தியாகப் பயன்படுத்துவது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான ஒரு உத்திபூர்வ அணுகுமுறையாக அமையும் எனச் சிலாங்கூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த முன்னெடுப்பின் மூலம், சிறை தண்டனை முடிந்து வெளியேறும் நபர்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கண்ணியமான முறையில் கட்டியெழுப்ப 'இரண்டாவது வாய்ப்பு' வழங்கப்படுவதாக மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் தெரிவித்தார்.

சமீபத்தில் காஜாங் சிறைச்சாலைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அங்குள்ள கைதிகளின் ஆற்றலை நேரில் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார். முறையான வழிகாட்டுதலும் பயிற்சியும் அளிக்கப்பட்டால், அவர்களைத் திறமையான தொழிலாளர்களாக மாற்ற முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் முதற்கட்டமாக, சுமார் 10 முன்னணி நிறுவனங்கள் சிறைக்கைதிகளுடன் நேர்காணல் நடத்துவதற்கு அழைத்து வரப்பட்டன. இந்த அணுகுமுறை கைதிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தருவது மட்டுமல்லாமல், தொழில்துறையினருக்குப் பயிற்சி பெற்ற உள்ளூர் உழைப்புச் சக்தியைப் பெற்றுத் தரவும் உதவும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிறைக்கைதிகளுக்குத் திறன் பயிற்சி அளிப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் 'கே.டி.இ.பி' (KDEB) கழிவு மேலாண்மை நிறுவனத்திற்குப் பாப்பாராயுடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக, குப்பை லாரிகளை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலம், கழிவு மேலாண்மைத் துறையில் அவர்கள் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில், உற்பத்தி, கட்டுமானம், விவசாயம் மற்றும் தோட்டப்பயிர் போன்ற '3D' (அழுக்கான, அபாயகரமான மற்றும் கடினமான) துறைகளில் இவர்களைப் பணியமர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக தோட்டப்பயிர் துறையில் இவர்களைத் திறமையான தொழிலாளர்களாக உருவாக்குவதற்குப் பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளதாக அவர் விளக்கினார். இத்தகைய முயற்சிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மீதான நாட்டின் தங்கியிருப்பைக் குறைப்பதோடு, உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.

"தவறு செய்தவர்கள் திருந்தி வாழ நாம் இரண்டாவது வாய்ப்பளிக்க வேண்டிய தருணம் இது; இதன் மூலம் உள்ளூர் உழைப்புச் சக்தியைக் கொண்டு நமது பொருளாதாரத்தையும் நாம் வலுப்படுத்த முடியும்," என்று பாப்பாராய்டு வீரமன் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.