மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்: செலவினக் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப பணிகளைச் சீரமைக்கப் பொதுப்பணி அமைச்சு தயார்

14 ஏப்ரல் 2026, 7:31 AM
மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்: செலவினக் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப பணிகளைச் சீரமைக்கப் பொதுப்பணி அமைச்சு தயார்

செலவினச் சவால்களை எதிர்கொள்ள, திட்டங்களின் நோக்கத்தை மாற்றியமைக்க பொதுப் பணி அமைச்சு தயாராக உள்ளது என்றும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து, செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், இந்தத் திட்டங்கள் தொடரும் என்று பொதுப் பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்ஸ்சாண்டர் நந்தா லிங்கி கூறினார். களத்தில் உள்ள உண்மையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப, திட்டங்களின் அமலாக்கம் யதார்த்தமாகவும் பொறுப்புணர்வுடனும் மாற்றியமைக்கப் படும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஜி 1 முதல் ஜி 4 வரையிலான குத்தகைதாரர்களை உள்ளடக்கிய கூட்டரசு சாலைகளின் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளில், திட்டங்களின் நோக்கத்தைக் குறைப்பது பொதுப் பணி அமைச்சு (KKR) பரிசீலிக்கும் அணுகுமுறைகளில் ஒன்றாகும்.

"உதாரணமாக, ஒரு கிலோமீட்டருக்கு 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு திட்டம், தற்போதைய செலவீனக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, இன்னும் தொடங்கப்படவில்லை என்றால் அதன் தூரம் குறைக்கப் படலாம்," என்று அவர் இன்று பொதுப் பணி அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

எண்ணெய் விலை உயர்வின் தாக்கம், கட்டுமானச் செலவுகளில் ஏற்படுத்தும் விளைவுகளைக் கண்காணிக்க, பொதுப் பணித் துறை (JKR), மலேசியக் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (CIDB) மற்றும் தொடர்புடைய பிற நிறுவனங்களுடன் இணைந்து உடனடி செயல் திட்டத்தை அமைச்சு ஒருங்கிணைக்கும் என்று நந்தா தனது உரையில் முன்னதாகக் கூறினார்.

சேகரிக்கப்படும் தரவுகள், விநியோகச் சங்கிலித் தடையால் பாதிக்கப்பட்ட திட்டங்களின் வேலை நோக்கத்தை சரிசெய்தல், கால நீட்டிப்பு வழங்குதல் மற்றும் மறுசீரமைத்தல் உள்ளிட்ட முடிவுகளை விரைவுபடுத்தப் பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், உள்ளூர் குத்தகைதாரர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர குத்தகைதாரர்களுக்கு, பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பொருத்தமான அளவிலான திட்டங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், செயல் பாட்டுச் செலவுகள் அதிகரிக்கும் போது அவர்கள் ஓரங்கட்டப் படாமல் இருப்பதை அமைச்சு உறுதி செய்யும்.

செயல்திறனை அதிகரிக்கவும், விரயத்தைக் குறைக்கவும், தளவாடச் செலவுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், தொழிற்துறை மயமாக்கப்பட்ட கட்டுமான அமைப்பு (IBS), கட்டிட தகவல் மாதிரியாக்கம் (BIM) மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், தானியங்கி வாகன எண் தட்டு அங்கீகார (ANPR) முறையிலான திறந்த சுங்கக் கட்டண முறை அமலாக்கம் குறித்துப் பேசிய நந்தா, இதுவரை 78 பாதைகளைக் கொண்ட ஒன்பது சுங்கச் சாவடிகளில் இத்திட்டம் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

"கடந்த ஜனவரி முதல், சுமார் 28,000 வாடிக்கையாளர்கள் 'JustGo' கட்டணத் தளத்தில் பதிவு செய்துள்ளனர், மேலும் 400,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன," என்றார்.

"இதுவரை, எந்த தொழில்நுட்ப சிக்கல்களும் இல்லாமல் செயல்பாடு சீராக நடந்து வருகிறது. 2027-க்குள் பன்வழிப் பாதை விரைவுப் போக்குவரத்து (MLFF) முறையை முழுமையாகச் செயல்படுத்தும் இலக்குடன் இந்த அமைப்பை விரிவுபடுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.