புத்ராஜெயா, ஜன 6- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய 2026 புத்தாண்டுச் செய்தியை அமைச்சரவை குழுவினர் வரவேற்றுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சியை விரைவு படுத்துவதற்கும் மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் தங்கள் அமைச்சகங்களில் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முழுமையாகச் செயல்படுத்த முழுமையான உறுதிப்பாட்டை அவர்கள் வலியுறுத்தினர்.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கெப்லி அஹ்மட் தனது முகநூல் பதிவில், பிரதமரின் செய்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் நாட்டின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், நிறுவனச் சீர்திருத்தத்தை முக்கிய மையமாக கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதில் பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு தவணைகளுக்கு மட்டுப்படுத்தும் சட்ட மசோதா (RUU) சமர்ப்பிப்பு, தகவல் சுதந்திரச் சட்ட மசோதா (FOI) உருவாக்குதல், ஒம்புட்ஸ்மன் நிறுவனம் நிறுவுதல் மற்றும் சட்டத்துறைத் தலைவர் (Attorney General) மற்றும் அரசு வழக்கறிஞர் (Public Prosecutor) இடையேயான அதிகாரப் பிரிப்பு ஆகியவை அடங்கும்.
மேலும், மேம்பாட்டின் பலன்களும் அரசாங்கத்தின் சேமிப்பும் நேரடியாக மக்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்காக, RON 95 மற்றும் டீசல் மானியத்தை மறுசீரமைக்கும் துணிச்சலான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு, சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA) போன்ற பிற உதவி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சுகாதார அமைச்சர், SARA 2025 உபரி நிதியில் RM150 மில்லியன் ஏழைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பிரதமர் அன்வார் அறிவித்ததாக குறிப்பிட்டார்.

"நிதி நெருக்கடி காரணமாக எந்தவொரு குடிமகனும் சிறந்த சிகிச்சையைப் பெறுவதில் இருந்து புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் 'யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்' என்ற கொள்கையின் தெளிவான வெளிப்பாடு இதுவாகும்," என்று அவர் தனது பதிவில் தெரிவித்தார்.
இதற்கிடையில், பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, பிரதமரின் செய்தியை வெறும் உரை மட்டுமல்லாமல், குறிப்பாக பொதுப்பணி அமைச்சகத்திற்கு (KKR) நாட்டின் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் விரைவாகவும், துரிதமாகவும், ஒருமைப் பாட்டுடனும் செயல்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதலாக கருதினார்.
அதிகாரத்துவ தாமதங்கள் இன்றி, குறிப்பாக மாநில மற்றும் மாவட்ட அளவில், அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களும் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்வது, அத்துடன் RM2.4 பில்லியன் ஒதுக்கீட்டில் G1 முதல் G4 வரையிலான சிறிய திட்டங்களை விரைவுபடுத்துவது ஆகியவை வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
அனைத்து அமைச்சகங்களும் பிப்ரவரி மாதத்திற்குள் உயர் தாக்கமுள்ள சிறிய திட்டங்களை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், விரைவாக முடித்து மக்களுக்கு நேரடிப் பலன் அளிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் நந்தா தெரிவித்தார்.
"பொதுப்பணி அமைச்சகத்தை வழிநடத்தும் அமைச்சர் என்ற முறையில், இந்த ஒவ்வொரு அறிவுறுத்தலும் செயல்படுத்தல் மட்டத்தில் மொழிபெயர்க்கப்படுவதை நான் உறுதி செய்வேன். இதன் மூலம் மேம்பாடு மக்களைச் சென்றடையும், பொருளாதாரம் தொடர்ந்து இயக்கப்படும் மற்றும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மேலும் வலுப்படுத்தப்படும்," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் கூறினார்.
அதேவேளையில், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் இந்த உரையை வரவேற்றார். நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துவதிலும் நிறுவனச் சீர்திருத்தம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
"சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசு வழக்கறிஞர் இடையேயான அதிகாரப் பிரிப்பு தொடர்பான சட்ட மசோதா, அத்துடன் பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு மிகாமல் அல்லது இரண்டு முழு தவணைகளுக்கு மட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஆகியவை இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்.
"இத்தகைய நிறுவனச் சீர்திருத்தங்கள் நல்ல நிர்வாகக் கொள்கைகளை வலுப்படுத்துவதில், பயனுள்ள சரிபார்ப்பு மற்றும் சமநிலை அமைப்பை உறுதி செய்வதிலும், நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்காக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல் மற்றும் அரசியலமைப்பின் இறையாண்மைக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப் படுத்துவதிலும் மிக முக்கியம்," என்று அவர் கூறினார்.

கூடுதலாக, பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் அமைப்புகளை செயல்படுத்துவதற்கு தனது அமைச்சகம் முன்னுரிமை அளிக்கும் என்றும், தகவல் சுதந்திரச் சட்ட மசோதா (FOI) முக்கிய மையமாக இருக்கும் என்றும் கோபிந்த் வலியுறுத்தினார்.
இந்தச் சட்ட மசோதா, அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட தகவல்களை அணுக தனிநபர்களின் உரிமை சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப் பட்டு பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதன் மூலம் பொதுச் சேவையில் உயர் வெளிப்படைத் தன்மைக்கான ஒரு ஊக்கியாக செயல்படும் என்று அவர் கூறினார்.
"அமைதியான, வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் மலேசியாவை நனவாக்கும் முயற்சியில் பிரதமரின் ஆணையை முழு அர்ப்பணிப்புடன் நாங்கள் நிச்சயமாக நிலை நிறுத்துவோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திரக் கூட்டத்தில், பிரதமர் அன்வார் 11 அறிவுறுத்தல்களை வழங்கினார். இதில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துதல், பிப்ரவரி 9 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு RM1000 SARA வழங்குதல் போன்ற அறிவிப்புகள் அடங்கும்.


