புத்ரா ஜெயா ஏப்14 - வீட்டில் கஞ்சா பயிரிடுமாறு பொதுத்துறை ஊழியர்களை ஊக்குவிப்பதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் போலிப் படத்தை அவரது அலுவலகம் இன்று கடுமையாக மறுத்துள்ளது.
அந்தப் படம் ஒரு அவதூறு மற்றும் டிஜிட்டல் முறையில் கையாளப்பட்ட ஒன்று என்றும், முகமது சாபு அத்தகைய அறிக்கையை வெளியிடாததால், அது பொது மக்களைத் தவறாக வழிநடத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
"இது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது விசாரணை மற்றும் மேல் நடவடிக்கைக்காக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (SKMM) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது," என்று அந்த அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்தது.
அதே வேளையில், போலி உள்ளடக்கத்தைப் பரப்ப வேண்டாம் என்றும், நம்பகமான தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ வழிகளை எப்போதும் பார்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், மேற்கு ஆசியாவில் மோதல் நீடித்தால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயத்தில் ஈடுபடுமாறு பொதுத்துறை ஊழியர்களுக்கு முகமது சாபு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







