மேற்கு ஆசிய நெருக்கடியிலும் மக்கள் வாழ்வாதாரம் காக்கப்படும்: சிலாங்கூர் மாநில அரசு உறுதி

12 ஏப்ரல் 2026, 2:16 AM
மேற்கு ஆசிய நெருக்கடியிலும் மக்கள் வாழ்வாதாரம் காக்கப்படும்: சிலாங்கூர் மாநில அரசு உறுதி
மேற்கு ஆசிய நெருக்கடியிலும் மக்கள் வாழ்வாதாரம் காக்கப்படும்: சிலாங்கூர் மாநில அரசு உறுதி

பந்திங், ஏப்ரல் 12 : மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், சிலாங்கூர் மாநில மக்கள் வேலையின்மையால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு முழு செயல்பட்டு வருவதாக வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

நேற்று கோலா லங்காட் மாவட்டத்தின் பந்திங்கில் உள்ள எம்.சி.எஸ் கல்லூரியில் நடைபெற்ற 'சிலாங்கூர் ஜோப்கேர்' (JobCare) வேலைவாய்ப்பு சந்தையில் கலந்து கொண்ட அவர், உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் மக்களைப் பாதிக்காத வகையில் மாநில அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த வேலைவாய்ப்பு சந்தை குறித்து கருத்து தெரிவித்த அவர், மக்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் அமையும் போது வறுமை விகிதம் இயல்பாகவே குறையும் என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.

குறிப்பாக, வருமானத்தை நிலைப்படுத்துவதற்காகச் சிலாங்கூர் சமூகப் பாதுகாப்பு அமைப்புடன் (PERKESO) இணைந்து வேலைவாய்ப்பு சந்தைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். நேற்று நடந்த நிகழ்வில் சுமார் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கின.

தொடர்ந்து பேசிய அவர், சுயமாகத் தொழில் செய்பவர்கள் மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள் தங்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகப் பெர்கேசோ (PERKESO) திட்டத்தில் இணைவது காலத்தின் கட்டாயம் என்று அறிவுறுத்தினார். ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அந்த நிறுவனமே காப்பீடு வழங்கும் நிலையில், சுயதொழில் புரிபவர்கள் விபத்துக்களைச் சந்தித்தால் அவர்களின் குடும்ப வாழ்வாதாரம், குறிப்பாகப் பிள்ளைகளின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தகுதியுள்ள அனைவரும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம், எதிர்பாராத இக்கட்டான சூழல்களில் தங்களின் குடும்பங்களைப் பாதுகாக்க முடியும் என்று பாப்பாராய்டு கேட்டுக்கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.