சிலாங்கூர் பள்ளி விளையாட்டுத் துறை மேம்பாடு: 2026-ஆம் ஆண்டிற்கான புதிய இலக்குகள் குறித்து ஆலோசனை

8 ஏப்ரல் 2026, 8:12 AM
சிலாங்கூர் பள்ளி விளையாட்டுத் துறை மேம்பாடு: 2026-ஆம் ஆண்டிற்கான புதிய இலக்குகள் குறித்து ஆலோசனை

ஷா ஆலம், ஏப்ரல் 8 – சிலாங்கூர் மாநில அளவிலான மாணவர்களின் விளையாட்டுத் துறை மேம்பாடு மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்த சிலாங்கூர் மாநிலப் பள்ளி விளையாட்டு மன்றத்தின் (MSS) முதன்மைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

2026-ஆம் ஆண்டில் மாநில மாணவர்களின் விளையாட்டுத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இது குறித்துச் சிலாங்கூர் மாநிலக் கல்வி அமைச்சு (JPN) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களிடையே உள்ள விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து மெருகேற்றுதல், பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் போட்டிகளின் மேலாண்மை முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் விளையாட்டுத் திட்டங்களை முறையாக ஒருங்கிணைத்தல் ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், கல்வியிலும் சரிசமமான சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என அதன் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வியூகங்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கான ஆதரவு மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

விளையாட்டு வீரர்களாகத் திகழும் மாணவர்களின் நலனை உறுதி செய்வதும் இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. தேசிய மற்றும் அனைத்துலக அளவில் சிலாங்கூர் மாநிலத்தைப் பள்ளி விளையாட்டுத் துறையில் ஒரு முன்னோடியாக மாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என மாநிலக் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சிலாங்கூர் மாநிலக் கல்வி அமைச்சின் முதன்மைக் கூட்ட அறையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாநிலக் கல்வி இயக்குநர் டத்தின் வான் நோர் ஆஷிகின் அபு காசிம் தலைமை தாங்கினார்.

மாநிலத்தின் விளையாட்டுத் திட்டங்கள் மிகவும் நேர்த்தியாகவும், உயர்தரத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய இக்கூட்டம் வழிவகுத்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.