'சுபாங் ஜெயா, ஏப்ரல் 5: நெரிசலான நகர்ப் புறங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப் படும் சமூகத் தோட்டத் திட்டத்திற்கு ஶ்ரீ செர்டாங் பிளாட் இக்கான்' ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்வதாக ஶ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி பாராட்டினார்.
'பிளாட் இக்கான்' சமூகத் தோட்டத் திட்டம் புதிதாகத் தொடங்கப் பட்டதல்ல, மாறாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள சட்டவிரோத குப்பைக் கொட்டும் இடத்தை சுத்தம் செய்து குடியிருப்பாளர்களால் தொடங்கப்பட்டது என்று அவர் கூறினார்."இந்தச் சமூகத் தோட்டம் 100 விழுக்காடு 'பிளாட் இக்கான்' குடியிருப்பாளர்-களால் இயக்கப்படுகிறது.
அவர்கள் நகர்ப்புற விவசாயத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.""அவர்களுக்கு நமது ஆதரவு மட்டுமல்லாமல், விவசாயத் துறை, தொடர்புடைய பிற அரசு நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
குடியிருப்பாளர்களின் ஒழுக்கமான நிர்வாகம் மற்றும் முறையான திட்டமிடல் காரணமாக, இந்தத் திட்டம் பல்வேறு சங்கங்கள் மற்றும் மாநில அளவில் பல விருதுகளை வென்று அங்கீகாரம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்."நான் மாநகராட்சி உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே இப்பகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறேன். காய்கறி நாற்றுகள் வழங்குவது போன்ற உதவிகளைச் செய்துள்ளேன்.
அண்மையில், சுமார் 5,000 ரிங்கிட் மதிப்புள்ள மீன் குளம் ஒன்றையும் வழங்கியுள்ளேன்."
"அந்தக் குளத்தில் 500 சிவப்பு திலாப்பியா மீன்கள் வரை வளர்க்கப்படுகின்றன. இந்த மீனின் சந்தை விலை கிலோவுக்கு 12 முதல் 14 ரிங்கிட் வரை விற்கப்பட்டாலும், இங்குள்ள சமூகம் உள்ளூர்வாசிகளுக்கு கிலோ 8 முதல் 9 ரிங்கிட் என்ற விலையில் விற்கிறது," என்றார்.
மீன் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம், புதிய நாற்றுகளை வாங்குவதற்கும், சிறிய குளங்கள் மூலம் சொந்தமாக நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கும் மீண்டும் பயன்படுத்தப் படுகிறது.
அரசாங்க உதவியை முழுமையாகச் சாராமல், சுயசார்புடன் செயல்படுவதே 'பிளாட் இக்கான்' சமூகத்தின் முக்கிய பலம் என்று அப்பாஸ் அஸ்மி வலியுறுத்தினார்."அவர்களிடம் பதிவேடுகள், கணக்குப் புத்தகங்கள் மற்றும் வேலை அட்டவணைகள் உள்ளன.
இந்த ஒழுக்கமும் சிறந்த நிர்வாகமுமே இந்த சமூகத் தோட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்," என்றார்.ஶ்ரீ செர்டாங் போன்ற நெரிசலான பகுதிகளில் உள்ள சமூகத் தோட்டங்கள், வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் குடியிருப்பாளர்களிடையே உறவுகளை வலுப்படுத்துவது என மூன்று முக்கிய நன்மைகளை வழங்குவதாக அவர் கூறினார்.
நீண்டகாலத் திட்டமாக, சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் ஊக்குவிக்கவும், பயிற்சி மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்காக அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கவும், சிறப்பாக நிர்வகிக்கப் படவும் சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) போன்ற உள்ளூராட்சி மன்றங்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்."'பிளாட் இக்கான்' நிர்வாகத்தில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.
ஒரு சமூகம் ஒன்றுபட்டு ஒழுக்கத்துடன் செயல்பட்டால், இதுபோன்ற திட்டங்கள் நீண்ட காலம் நிலைத்து மக்களுக்குப் பெரும் பயனளிக்கும் என்பதற்கு இதுவே சான்று," என்றார் அவர்






