சிலாங்கூரில் எஸ்.பி.எம். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கு மாநில அரசு உதவும்

5 ஏப்ரல் 2026, 2:28 AM
சிலாங்கூரில் எஸ்.பி.எம். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கு  மாநில   அரசு உதவும்

ஷா ஆலாம், ஏப் 5; மாநிலத்தில் உள்ள எஸ்.பி.எம். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கு உதவும் வகையில் சிலாங்கூர் அரசாங்கம் பல்வேறு முன்முயற்சி-களை வழங்குகிறது.

உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்
கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதை எளிதாக்கும் நோக்கில் இந்த உதவிகள் கல்வி உதவித்தொகை அல்லது கடன் வடிவில் வழங்கப் படுகின்றன.

ஆறாம் படிவத்தைத் தேர்ந்தெடுக்கும் எஸ்.பி.எம். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை (MBI) உதவி வழங்குவதாக அதன் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனால் நூர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எஸ்.டி.பி.எம். தேர்வுக்கு வழிவகுக்கும் இந்த ஆறாம் படிவப் பாதையைத் தேர்ந்தெடுப்பதாக அவர் கூறினார்.

ஆறாம் படிவம் பயிலும் இரண்டு ஆண்டு காலத்திற்கு, மாணவர்களுக்கான சாதனம் (device) மற்றும் இலவச இணையத் தரவு உள்ளிட்ட உதவிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிலாங்கூர் அரசாங்கம் ஏப்ரல் மாதம் வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

"பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிக்கு நேரடியாகச் செல்லாத காரணத்தினால், ஆறாம் படிவ மாணவர்கள் இரண்டாம் பட்ச தேர்வாகக் கருதப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இதனால், அவர்களுக்கான பல்வேறு உதவிகள் சென்றடைவதில்லை. இந்த நிலையை மாற்ற விரும்புகிறோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் மார்ச் 31-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. முதன்முறையாக அறிமுகப் படுத்தப்படும் இந்த முன்முயற்சியில் 300 மாணவர்களுக்கான ஒதுக்கீடு உள்ளதாகவும், தகுதியான மாணவர்களை அடையாளம் காண சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களுடன் இணைந்து தேர்வு செய்யப்படும் என்றும் அஹ்மட் அஸ்ரி கூறினார்.

இதற்கு முன்பு, ஆறாம் படிவ மாணவர்களுக்குக் குறிப்புப் புத்தகங்கள் வாங்க உதவும் வகையில், 200 ரிங்கிட் மதிப்புள்ள புத்தக வவுச்சர்களைச் சிலாங்கூர் அரசாங்கம் வழங்கியது. இந்தத் திட்டம் இந்த ஆண்டும் தொடர்கிறது.

கடந்த ஆண்டு, இந்த முன்முயற்சிக்காக 400,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்
பட்டதாகவும், இந்த ஆண்டு ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 3 முதல் டிசம்பர் 23 வரை நாடு தழுவிய அளவில் 413,372 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதினர். இதில் சிலாங்கூரைச் சேர்ந்த 73,899 மாணவர்களும் அடங்குவர்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், சிலாங்கூரில் எஸ்.பி.எம். தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் A+, A, மற்றும் A- பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 0.50 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சிலாங்கூருக்கான 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். மாநில சராசரி தரநிலை (GPN) 4.59 புள்ளிகளாகப் பதிவானது. இது முந்தைய ஆண்டின் 4.67 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது 0.08 புள்ளி முன்னேற்றமாகும்.



உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.