ஷா ஆலம், ஏப்ரல் 4: அண்மையில் நடந்து முடிந்த மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்ற சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 45 விளையாட்டு வீரர்களுக்கு RM500 முதல் RM1,000 வரையிலான ரொக்க ஊக்கத்தொகை வழங்கப் பட்டது.
கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் சமமான சிறப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள மாநில விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஊக்கத்தொகை ஒரு உந்துதலாக அமையும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
"கல்வி மற்றும் விளையாட்டு இரண்டையும் சமநிலைப்படுத்தும் முயற்சியைப் பாராட்டும் விதமாக, மொத்தம் 45 விளையாட்டு வீரர்கள் தங்களின் தேர்ச்சி நிலைக்கு ஏற்ப RM500 முதல் RM1,000 வரை ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
"இது, மாநிலத்தை விளையாட்டில் பிரதி நிதிப்பது மட்டுமல்லாமல், பெருமைக்குரிய கல்வித் திறனையும் வெளிப்படுத்திய சிலாங்கூர் விளையாட்டு வீரர்களுக்கான அங்கீகாரமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.
இன்று, இங்குள்ள செக்ஷன் 7, ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு மற்றும் கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினரின் ஈகைத்திருநாள் உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 முதல் 6,000 வருகையாளர்கள் வரை கலந்து கொண்டனர். கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி, சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (MSN), சுக்மா செயலகம், ஹிஜ்ரா சிலாங்கூர் மற்றும் பல ஏஜென்சிகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை மேம்படுத்து- வதற்கான மாநில அரசின் முயற்சிக்கு ஏற்ப, ஒருங்கிணைந்த முறையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நஜ்வான் கூறினார்.
"நிகழ்ச்சி ஏற்பாட்டுச் செலவுகளைச் சேமிக்க வேண்டும் என்ற பிரதமரின் பரிந்துரைக்கு இணங்க இந்த ஒருங்கிணைந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. ஒதுக்கீடுகளை மிகவும் திறமையாகவும் விவேகமாகவும் பயன்படுத்தும் வகையில், துறைகளும் ஏஜென்சிகளும் ஒரே நிகழ்ச்சியில் இணைக்கப்பட்டுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கொண்டாட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த பொதுமக்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
"ஈகைத்திருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, மக்களுடன் நல்லுறவைப் பேணவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது," என்றார்.
2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில SPM தேர்வு முடிவுகள் பெருமைக்குரிய சாதனையை பதிவு செய்துள்ளன. முந்தைய ஆண்டில் 91.53 விழுக்காடாக இருந்த சான்றிதழ் பெறத் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை, 2025-இல் 92.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SPM தேர்வில் சிறந்து விளங்கிய 45 சிலாங்கூர் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி
4 ஏப்ரல் 2026, 8:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?




