சுவிட்சர்லாந்து நாட்டவரிடமிருந்து 2.66 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

3 ஏப்ரல் 2026, 8:46 AM
சுவிட்சர்லாந்து நாட்டவரிடமிருந்து 2.66 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

புத்ராஜெயா, ஏப்ரல் 3 - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் (KLIA Terminal 2), சுமார் 2 லட்சத்து 66 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 3.3 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் அரச மலேசிய சுங்கத்துறை மற்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS) அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் இந்த போதைப்பொருள் கடத்தல் வெளிச்சத்திற்கு வந்தது.

தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிலிருந்து மலேசியாவிற்குள் நுழைய முயன்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் கொண்டு வந்த தண்ணீர் குழாய் (water hose reel) அடங்கிய பெட்டியை ஸ்கேன் செய்தபோது, அதில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவினர் அந்தப் பெட்டியைப் பிரித்துத் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, தண்ணீர் குழாயின் உட்புறத்தில் கருப்பு நிற உறைகளால் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் போதைப்பொருள் பொட்டலங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட சுங்கத்துறை இயக்குனர் சுல்கிப்ளி முகமட், பிடிபட்ட அந்த ஆடவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது இந்த விவகாரம் 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டப் பிரிவு 39B(1)(a)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் நுழைவாயில்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.