ஜெனீவா, ஜன 5 — சுவிட்சர்லாந்தின் வாலாய்ஸ் கேன்டனில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற ரிசார்ட் நகரத்தில் அமைந்துள்ள பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களின் அடையாளங்களை சுவிஸ் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 14 முதல் 39 வயது வரையிலான 40 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது. அதில் 21 பேர் சுவிஸ், ஏழு பேர் பிரெஞ்சு, ஐந்து பேர் இத்தாலியர்கள் மற்றும் பெல்ஜியம், போர்ச்சுகல், ருமேனியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர் என்று வாலாய்ஸ் மாவட்ட காவல்துறை தெரிவித்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் சிறார்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை, அலட்சியத்தால் ஏற்பட்ட உடல் காயம் மற்றும் அலட்சியத்தால் ஏற்பட்ட தீ விபத்து ஆகிய சந்தேகத்தின் பேரில் "லெ கான்ஸ்டெல்லேஷன்" பாரின் இரண்டு மேலாளர்கள் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து தேசிய துக்க தினத்தை அனுசரிக்கும் என சுவிஸ் அதிபர் கை பர்மெலின் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


