காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி - அதிபர் டொனால்ட் டிரம்ப்

3 ஏப்ரல் 2026, 4:20 AM
காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீத வரி - அதிபர் டொனால்ட் டிரம்ப்

நியூயார்க், ஏப்ரல் 3: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்கள் மற்றும் அதன் மூலப்பொருட்கள் மீது 100 சதவீத கூடுதல் வரியை விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பெருமளவிலான இறக்குமதிகள் நடைபெறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை கையெழுத்திடப்பட்ட இந்த நிர்வாக உத்தரவின்படி, இந்த புதிய வரி விதிப்பு முறை எதிர்வரும் ஜூலை 31-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

அமெரிக்க வர்த்தகச் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்ட, உள்நாட்டிலேயே உற்பத்தியைத் தொடங்கும் திட்டத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் 20 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும். இருப்பினும், அந்த வரி விகிதமும் எதிர்வரும் 2030-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி முதல் 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்கு இந்த வரி விதிப்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும் வேளையில், ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) 10 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பொதுவான மருந்துப் பொருட்கள் (Generics), உயிரியல் சார்ந்த மருந்துகள் (Biosimilars) மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மூலப்பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணுசக்தி மருந்துகள், பிளாஸ்மா அடிப்படையிலான சிகிச்சைகள், கருவுறுதல் சிகிச்சை மருந்துகள் மற்றும் செல் மற்றும் மரபணு சிகிச்சை முறைகளுக்கும் இந்த வரி உயர்வில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவு உலகளாவிய மருந்து சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.