குடியிருப்பு பகுதிகளில் வாகனப் பழுதுபார்க்கும் பட்டறைகளுக்குத் தடை - ஷா ஆலம் மாநகராட்சி

3 ஏப்ரல் 2026, 3:19 AM
குடியிருப்பு பகுதிகளில் வாகனப் பழுதுபார்க்கும் பட்டறைகளுக்குத் தடை - ஷா ஆலம் மாநகராட்சி

ஷா ஆலம், ஏப்ரல் 3: குடியிருப்பு வீடுகள் மற்றும் வீட்டின் முகப்புப் பகுதிகளில் (Porch) அனுமதியின்றி வாகனப் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டையும் ஏற்படுத்துவதாக மாநகராட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஷா ஆலம் துணை மேயர் சாப்ரியா முகமட் அட்ஜார் கூறுகையில், குடியிருப்பு மண்டல விதிகளை மீறி செயல்படும் இத்தகைய பட்டறைகள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். விதியை மீறுபவர்களுக்குப் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

வீடுகளில் செயல்படும் பட்டறைகளால் ஏற்படும் சத்தம், பயன்படுத்தப்பட்ட எஞ்சின் எண்ணெயை முறையாக அகற்றாமல் வடிகால்களில் ஊற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாகன நெரிசல் குறித்து மாநகராட்சிக்குப் புகார்கள் குவிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பழுதுபார்க்க வரும் வாகனங்கள் பொதுமக்களின் வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமித்துக் கொள்வது அக்கம் பக்கத்தினருக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் தங்களது வணிகத்தை அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றுவதற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்கு 5,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் ஷா ஆலம் முழுவதும் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 10 பட்டறைகள் மாநகராட்சியால் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், செக்சன் 17 பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் உரிமம் இல்லாத சிற்றுண்டிச் சாலை (Cafe) ஒன்றில், மாநகராட்சியும் காவல்துறையினரும் இணைந்து அதிரடிச் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின் போது அங்கிருந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, வெளிநாட்டினர் சிலரும் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், சட்ட விதிமுறைகளை உறுதிப்படுத்தவும் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என துணை மேயர் சாப்ரியா மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.