கோம்பாக், மார்ச் 30: கெமென்சாவில் உள்ள புக்கிட் பாவ், உலு கோம்பாக் கூடுதல் வனக் காப்பகத்தில் முறையான அனுமதியின்றி பொழுது போக்கு நடவடிக்கையில் ஈடுபட்ட 92 பேர், நேற்று நடைபெற்ற 'ஓப்ஸ் பாவ்' நடவடிக்கையில் தடுத்து வைக்கப் பட்டனர்.
சிலாங்கூர் மாநில வனத்துறையின் (JPNS) இந்த அமலாக்க நடவடிக்கை, மத்திய சிலாங்கூர் மாவட்ட வன அதிகாரி முகமட் ஹட்ரே முகமட் தலைமையில் 22 உறுப்பினர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மலையேறும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக நம்பப்படுகிறது. நிரந்தர வனக் காப்பகத்தில் நுழைவதற்கான அனுமதியை (படிவம் 6) அவர்கள் பெறவில்லை என வனத்துறை தெரிவித்தது.
"ஏற்பாட்டாளர் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு, மேல் விசாரணைக்காக தாமான் மெலாவத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்" என்று JPNS தனது முகநூல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் செயல், 1985-ஆம் ஆண்டு தேசிய வனத் துறை சட்ட அமலாக்கத்தின் விதி 47-வது பிரிவின் கீழ் ஒரு குற்றமாகும் என்று JPNS வலியுறுத்தியது. சட்ட நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, வனக் காப்பக பகுதிகளில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் அமைப்பாளர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று நினைவூட்ட படுகிறார்கள்.








