கோலாலம்பூர், ஆக. 29 - நாட்டின் 68வது தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தங்கள் பராமரிப்பில் உள்ள நெடுஞ்சாலைகளை சுமார் 22 லட்சம் வாகனங்கள் நாளையும் வரும் செப்டம்பர் முதல் தேதியும் பயன்படுத்தும் என பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) நிறுவனம் கூறியுள்ளது.
சீரான மற்றும் சௌகரியமான பயணத்தை உறுதி செய்வதற்காக தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படி பிளஸ் நிறுவனம் வாகன ஓட்டிகளுக்கு ஆலோசனை வழங்கியது.
பிளஸ் மற்றும் எல்.பி.டி.2 ஆகிய நெடுஞ்சாலைகளில் பெருநாள் அல்லாத உச்ச காலங்களில் வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுவதற்காக பிளஸ் செயலியில் உள்ள MyPLUS-TTA முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
விரைவான பயணத்திற்காக பிடித்த வழிகள் செயலியின் கீழ் தங்களுக்கு விருப்பமான வழிகளை சேமித்து வைக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, தேடல் முடிவுகள் பக்கத்தில் ‘நிகழ்நேர எச்சரிக்கை காட்சிகள்’ இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நிலவரங்கள் தொடர்பான தகவல்களை வாகன ஓட்டிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இயலும் என அது குறிப்பிட்டது.
முந்தைய பெருநாள் காலங்களைப் போல அல்லாமல் பயணத் தேதிகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பொருத்தமான பயண வழிகாட்டிகளைப் பின்பற்றி தங்கள் பயணத்தை திட்டமிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, தேசிய தின மாதத்தை முன்னிட்டு நாட்டுப்பற்று உணர்வை விதைக்கும் வகையில் பிளஸ் நிறுவனம் அனைத்து ஓய்வு மற்றும் சாலையோர நிறுத்தங்களில் அலங்காரப் பணிகளை மேற்கொண்டுள்ளது.