லெபனானையும் உள்ளடக்கி போர்நிறுத்தம் விரிவுபடுத்தப்பட வேண்டும் - பிரதமர்

26 மார்ச் 2026, 4:17 AM
லெபனானையும் உள்ளடக்கி போர்நிறுத்தம் விரிவுபடுத்தப்பட வேண்டும் - பிரதமர்

கோலாலம்பூர், மார்ச் 26: மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலுக்கான போர்நிறுத்தத்தை லெபனானையும் உள்ளடக்கி விரிவுபடுத்த வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துகிறது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

லெபனான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அங்கு சுமார் பத்து லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதோடு, 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாலும் இந்த அழைப்பு விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

"லெபனான் பிரதமர் நவாப் சலாமுடனான தொலைபேசி உரையாடலில் இந்த நிலைப்பாட்டை நான் தெரிவித்தேன். லெபனானின் இறையாண்மைக்கு மலேசியா தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்தினேன்.

பொது உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதுடன், பதட்டங்களைத் தணித்து அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தேன். மேலும், மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

இந்த உரையாடலின்போது, பிரதமர் தனது சகாவிற்கு Selamat Hari Raya Aidilfitri வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் (UNIFIL) கீழ் பணியாற்றும் மலேசிய பட்டாலியன் (MALBATT) வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பேணுவதில் லெபனான் அரசாங்கம் அளித்துவரும் ஆதரவிற்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

"பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் லெபனான் மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற மலேசியா உறுதியாக உள்ளது என்பதையும் நான் வெளிப்படுத்தினேன்," என்று அவர் கூறினார்.

கடந்த மார்ச் 2ஆம் தேதி ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா குழு நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களையும் நாட்டின் தெற்கில் தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 1,039 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 2,876 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.