ஷா ஆலம், மார்ச் 26 - டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து, வர்த்தகர்கள் நியாயமற்ற முறையில் பொருள்களின் விலைகளை உயர்த்துவதைத் தடுக்கும் நோக்கில், சிலாங்கூர் அரசாங்கம் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுச் சந்தைகள், சில்லறை விற்பனை வளாகங்கள் மற்றும் விநியோக மையங்களில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுடன் (KPDN) இணைந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று பயனீட்டாளர் விவகார ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.
நியாயமற்ற செலவு உயர்வுகளின் தாக்கத்திலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதில் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
"டீசல் விலை உயர்வால் மக்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் அன்றாடத் தேவைகளின் விலைகளில் நேரடிப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது குறித்த மக்களின் கவலையை மாநில அரசு நன்கு புரிந்துகொண்டுள்ளது," என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.
விலை உயர்வு சிக்கல்கள் குறித்து மக்கள் புகார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில அரசு வலுப்படுத்தும் என்றும், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுவினருக்கு உதவும் வகையில், இலக்குடனான உதவிகள் மற்றும் தலையீடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகள் அதிகரிக்கப்படும்.
விலைகள் மற்றும் பொருள் விநியோகத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் வர்த்தகர்களும் விநியோகஸ்தர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சுங்கை தவார் சட்டமன்ற உறுப்பினருமான ரிசாம் இஸ்மாயில் கேட்டுக்கொண்டார்.
மேலும், மாநில அரசாங்கம் எப்போதும் மக்களுடன் துணை நிற்கும் என்றும், எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சமூகத்தின் நலனுக்குப் பயனளிப்பதை உறுதிசெய்யும் என்றும் அவர் கூறினார்.
"ஒவ்வொரு கொள்கை மற்றும் நடவடிக்கையிலும் மக்களின் நலனே முதன்மை முன்னுரிமையாக உள்ளது," என்றார் அவர்.
நாட்டின் வெப்பமான காலநிலை மற்றும் தற்போதைய டீசல் விலை உயர்வு காரணமாக வெங்காயத் தாள், வல்லாரை, உலாம் ராஜா, எலுமிச்சை, வெண்டைக்காய் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.








