சிலாங்கூர் மாநில அணைக்கட்டுகள் பாதுகாப்பான மட்டத்தில் உள்ளன

25 மார்ச் 2026, 4:27 AM
சிலாங்கூர் மாநில அணைக்கட்டுகள் பாதுகாப்பான மட்டத்தில் உள்ளன

ஷா ஆலம், மார்ச் 25: சிலாங்கூரில் உள்ள எட்டு முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்க குளங்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளன. அவற்றின் கொள்ளளவு தற்போது 79 முதல் 99 விழுக்காடு வரை பதிவாகியுள்ளது.

சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியத்தின் (LUAS) ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை தகவல் அமைப்பு (IWRIMS) தரவுகளின்படி, இரண்டு அணைகள் மட்டுமே 80 விழுக்காட்டிற்கும் குறைவான நீர் மட்டத்தைப் பதிவு செய்துள்ளன.

அதாவது சுங்கை சிலாங்கூர் அணை 78.77 விழுக்காட்டையும், சுங்கை திங்கி அணை 79.75 விழுக்காட்டையும் பதிவு செய்துள்ளன.

மற்ற ஆறு அணைகள் சிறந்த நிலையில் உள்ளன. சிப்பாங்கில் உள்ள சுங்கை லாபு நீர்த்தேக்க குளம் 99.24 விழுக்காடு என்ற மிக உயர்ந்த நீர் மட்டத்தைப் பதிவு செய்துள்ளது.

கோடை மற்றும் வறண்ட காலத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் தயாராக இருப்பதாகக் கடந்த பிப்ரவரியில் உள்கட்டமைப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்ஹாம் ஹாஷிம், கூறினார். மாநிலத்தின் அனைத்து அணைகளிலும் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் அளவுக்கு போதுமான நீர் இருப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வறண்ட காலங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தடையின்றி மூல நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, லுவாஸ் மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழைக்கு (MBD) முன்பாக, அணைகள் உகந்த மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்ய மாநில அரசு பல்வேறு ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இஸ்ஹாம் கூறினார்.

முன்னதாக, மலேசிய வானிலை ஆய்வு மையம் (MET Malaysia), தென்மேற்குப் பருவமழையால் ஏற்படும் கோடை மற்றும் வறண்ட காலம் மே மாதம் தொடங்கி செப்டம்பர் 2026 வரை நீடிக்கும் என்று கணித்திருந்தது.

கெடாவில் உள்ள பெண்டாங், பொக்கோக் சேனா மற்றும் பாலிங் ஆகிய மாவட்டங்களில் இரண்டாம் நிலை வெப்ப அலை நிலவுவதால், நாட்டின் பல பகுதிகளில் இந்த நிலை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளது. இங்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

தீபகற்பத்தில் பெர்லிஸ் உட்பட கெடா, பினாங்கு, பேராக் மற்றும் பகாங்கின் சில மாவட்டங்கள் என மேலும் 16 பகுதிகள் முதல் நிலை (விழிப்பு நிலையில்) வெப்பத்தில் உள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.