ஷா ஆலம், 21 மார்ச்: ஷா ஆலம் பிரிவு 9-ல் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த வீடு புகுதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று ஆண் சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஷா ஆலம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ராம்சே எம்போல் தெரிவித்தார்.
அதே நாள் இரவு 11.52 மணியளவில் 60 வயது வீச்சிலான உள்ளூர் ஆண் ஒருவரிடமிருந்து சம்பவம் தொடர்பான புகார் பெறப்பட்டது. மூன்று அடையாளம் தெரியாத சந்தேக நபர்கள் முழுக்க கருப்பு உடை அணிந்து, முகத்தை மூடிய நிலையில், நடந்து சென்றவாறு இரவு 8 மணி முதல் 11 மணி வரை இந்தச் சம்பவத்தை நடத்தியதாக நம்பப் படுகிறது.
“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வீட்டில் சிசிடிவி கேமரா அல்லது பாதுகாப்பு அலாரம் அமைப்பு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.“என்றாலும், போலீசார் வீட்டு வளாக நிர்வாகம் மற்றும் அருகில் உள்ள அண்டை வீட்டாரிடமிருந்து சிசிடிவி பதிவுகளைப் பெற்றுள்ளனர்.
இது மேலும் விசாரணைக்கு உதவும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.இந்த வழக்கு சட்டவிரோத நுழைவு தொடர்பான சட்ட பிரிவு 457 இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார். இந்தப் பிரிவின்படி குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது கசைஅடி தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் குற்ற விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் மொஹமட் அம்ஸார் மொஹமட் ஷஃபீயை 013-6666657 என்ற எண்ணில் அல்லது ஷா ஆலம் மாவட்டக் காவல் நிலையத்தை 03-55202222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




