திடீர் பெருநாள்" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்கள் தொடர்கின்றன

19 மார்ச் 2026, 3:17 AM
திடீர் பெருநாள்" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்கள் தொடர்கின்றன

கோலாலம்பூர், மார்ச் 19: "பெருநாள் வெள்ளியா, சனியா?" இந்தக் கேள்விதான் தற்போது சமூகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இது புனிதமிகு நோன்புப் பெருநாளை எதிர்நோக்கியுள்ள மக்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

"திடீர் பெருநாள்" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. பேரரசர்களின் முத்திரை காப்பாளர் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பெருநாள் வெள்ளிக்கிழமை வருமா அல்லது சனிக்கிழமையா என்பதை உறுதிப்படுத்தும் எனப் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில், அனைவரின் கவனமும் இன்று  நடைபெறவிருக்கும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் நிகழ்வின் மீது திரும்பியுள்ளது. இதுவே அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்து, 1 ஷவ்வால் எப்போது தொடங்கும் என்ற உண்மையான தேதியை நிர்ணயிக்கும்.

முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறை அறிவித்தது, மற்றும் பெருநாளை முன்னிட்டு இரண்டு நாட்களுக்குச் சாலைக் கட்டணக் கழிவு இன்று முதல் அமலுக்கு வந்தது போன்ற சில அறிகுறிகளால் இந்த ஊகங்கள் வலுப்பெற்றன.

பெர்லிஸ் முஃப்தி டத்தோ டாக்டர் முகமட் அஸ்ரி ஜைனுல் அபிதீன், தனது 'X' சமூக வலைத்தளப் பதிவு மூலம் இந்த விவாதத்திற்கு மேலும் சூட்டைக் கிளப்பினார்.

மாற்றியமைக்கப் படுவதற்கு முந்தைய பழைய அளவு கோல்களின்படி, ஷவ்வால் முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று வர வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். "2022-இல் நிகழ்ந்தது மீண்டும் நிகழுமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

கூகுள் நாட்காட்டியில் முன்பு சனிக்கிழமை என்று காட்டப் பட்டிருந்த 1 ஷவ்வால் தேதி, வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டதும் இணையவாசிகள் மத்தியில் இந்த விவாதம் சூடுபிடித்தது.

இது பல்வேறு கருத்துகளுக்கும் யூகங்களுக்கும் வழிவகுத்தது.ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் மார்ச் 20 ஆம் தேதி பெருநாள் கொண்டாடப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.'Threads' சமூக வலைத்தளம் வழியாக, ஒரு பயனர் மலேசியாவிலும் இதே போன்ற எதிர்பார்ப்பு நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

"ஆஸ்திரேலியாவில் மார்ச் 20, வெள்ளிக்கிழமை அன்று பெருநாள். மலேசியர்கள் இந்த ஆண்டும் திடீர் பெருநாளை எதிர்கொள்ள வேண்டாம்," என்று அவர் பதிவிட்டிருந்தார்.

முகநூலில், பலரும் "திடீர் பெருநாளை" கொண்டாடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஷரிஃபா ஆயிஷா சையத் முகமது என்பவர், "எதுவாக இருந்தாலும், 20-ஆம் தேதி பெருநாள் கொண்டாடத் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

மற்றொரு பயனரான நூர் ரஸினா முகமது, தேதி ஒரு பொருட்டல்ல, ஏனெனில் அவர் ஏற்கனவே சொந்த ஊருக்குத் திரும்பி விட்டதாகக் குறிப்பிட்டார். இதற்கிடையில், மற்ற பயனர்கள் இந்த ஊகங்கள் குறித்து பல்வேறு பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் 29 இடங்களில் நாளை மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கப்படும் என்றும், நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் தேதி அதே நாள் இரவு அறிவிக்கப்படும் என்றும் பேரரசர்களின் முத்திரை காப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.