333 விடுதிப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத் திட்டத்தை விரைவுபடுத்துகிறது கல்வி அமைச்சு

15 மார்ச் 2026, 2:10 AM
333 விடுதிப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத் திட்டத்தை விரைவுபடுத்துகிறது கல்வி அமைச்சு

கோத்தா பாரு, மார்ச் 14: மலேசியக் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் 333 விடுதிப் பள்ளிகளில், இரண்டாம் கட்டமாகப் பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்படும் நடவடிக்கை இந்த ஆண்டிற்குள் விரைவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், கடந்த 2025-ஆம் ஆண்டு 200 பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட முதற்கட்டத் திட்டத்தின் தொடர்ச்சியாகும்.

தற்போது இத்திட்டம் தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வில் உள்ளதாகக் கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அசாம் அகமட் குறிப்பிட்டார். குறிப்பாக, பள்ளிகளில் இத்தகைய பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்தும்போது, மாணவர்களின் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் ரகசியக் காப்பு சட்டங்கள் (Privacy Laws) மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வது மிக அவசியம் என்றார்.

எனவே, கேமராக்கள் தன்னிச்சையாகப் பொருத்தாமல், அரசாங்கத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியின் அலுவலகம் (CGSO) மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தக் கேமராக்களைப் பொருத்துவதற்கான தொழில்நுட்ப முறைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பெறுவதற்காகப் பொதுப்பணித் துறையுடனும் (JKR) கல்வி அமைச்சு நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.

சட்ட ரீதியிலான மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் ஒருபுறம் நடந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட 333 விடுதிப் பள்ளிகளிலும் இவ்வாண்டிற்குள்ளேயே இப்பணிகள் முடிக்கப்படும் என முகமட் அசாம் உறுதியளித்தார்.

ஏற்கனவே முதற்கட்டமாக 3 மில்லியன் ரிங்கிட் செலவில் 200 பள்ளி விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விடுதி மாணவர்களின் பாதுகாப்பு தரம் மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.