இந்து மதத்தின் புனிதச் சின்னமான திரிசூலத்தை மிதித்துச் சேதப்படுத்திய ஒரு நபரின் நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் வன்மையான அவமதிப்பாக எடுத்துக் கொள்கிறோம். இந்தச் செயல் இந்து மதத்தைப் பின் பற்றுபவர்களின் நம்பிக்கைகளை அவமதிப்பது மட்டுமல்லாமல், நம் நாட்டில் இன மற்றும் சமயங்களுக்கிடையில் பதட்டங்களைத் தூண்டும் ஒரு செயல். இது ஒரு சிறிய விஷயம் அல்ல. இது மதக் கண்ணியம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தைக் கீழறுக்கும் செயல்.
நீண்டகாலமாக மதங்களுக்கிடையே வளர்ந்து வரும் பரஸ்பர மரியாதை யின் அடிப்படையில் பல இன மலேசியா கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குர்ஆன் புனித நூலை அவமதித்தவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை போலீசார் எடுத்தனர். அதே சட்டத்தின் படியும், நீதி மற்றும் சமத்துத்துவம் காக்க , மற்ற சமயங்களின் புனிதத்தை மற்றும் புனித சின்னங்களை அவமதிக்கும் எவருக்கும் எதிராகவும் போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமய மற்றும் சமய சின்னங்கள் அவமதிப்பு விஷயத்தில் எந்த சமரசமும் இல்லை. இது தொடர்பாக, எங்கள் போலீஸ் புகாரை கவனத்தில் கொண்டு அரச மலேசிய காவல்துறை (பி. டி. ஆறு. எம்) உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், அனைத்து மலேசியர்களும் அமைதியாக இருக்கவும், எந்த ஒரு ஆத்திர மூட்டலாலும் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நமது மதம் மதிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புவதைப் போலவே மற்றவர்களும் அவரவர் மதங்களை அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து,. இந்த நேரத்தில் நாம் அனைவரும் இதுவரை ஒன்றாக கட்டியெழுப்பிய இன-சமய நல்லிணக்கத்தை அழிக்க முயல வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு டாக்டர். குணராஜ் ஜோர்ஜ் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்.






