இந்து சமயப் புனிதச் சின்னமான 'திரிசூலம்' அவமதிப்பு; காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தல் 

9 மார்ச் 2026, 5:09 AM
இந்து சமயப் புனிதச் சின்னமான 'திரிசூலம்' அவமதிப்பு; காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தல் 

ஷா ஆலம், மார்ச் 9- சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்து சமயத்தின் புனிதச் சின்னமான 'திரிசூலத்தை' காலால் மிதித்து சேதப்படுத்தும் காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 இச்சம்பவம் மலேசிய இந்து சமூகம் மட்டுமன்றி, நாட்டின் நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ் கூறினார். 

 இந்நிலையில் நாட்டின் பல்லினச் சமூகக் கட்டமைப்பில் இத்தகையச் செயல்கள் சமயப் பதற்றத்தைத் தூண்டும் அபாயம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 மலேசியா எப்போதும் மத சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாடாகும்.

 அண்மையில் புனித அல்குர்ஆனை அவமதித்த நபர்களுக்கு எதிராகச் சட்டம் தனது கடமையைச் சரியாகச் செய்தது போல, மற்ற சமயங்களின் புனிதச் சின்னங்களை இழிவுபடுத்துபவர்கள் மீதும் எவ்விதப் பாகுபாடுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட நபரை அரச மலேசியக் காவல்துறை (PDRM) உடனடியாகக் கண்டறிந்து விசாரிக்க வேண்டும் என்று டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தி உள்ளார். 

 எத்தகையச் சூழலிலும் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது என்றும், இத்தகையத் தூண்டுதல்களுக்கு இடமளிக்காமல் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்க முயலும் இத்தகைய விஷமிகளுக்கு எதிராகத் தீர்க்கமான முன்னுதாரண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.