போலி ஆவண விவகாரம்: 7 மலேசிய வீரர்களின் மேல்முறையீட்டைப் பகுதியளவு ஏற்றது விளையாட்டு நடுவர் மன்றம்

6 மார்ச் 2026, 8:09 AM
போலி ஆவண விவகாரம்: 7 மலேசிய வீரர்களின் மேல்முறையீட்டைப் பகுதியளவு ஏற்றது விளையாட்டு நடுவர் மன்றம்

கோலாலம்பூர், மார்ச் 6- மலேசியத் தேசியக் கால்பந்து அணியான 'ஹரிமாவ் மலாயா'வின் ஏழு வாரிசு அடிப்படையிலான (Heritage Players) வீரர்களுக்கு, குடியுரிமை ஆவணங்களை மோசடி செய்ததற்காக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) விதித்த தடையை சுவிட்சர்லாந்தின் விளையாட்டு நடுவர் மன்றம் (CAS) பகுதியளவு மாற்றியமைத்துள்ளது.

அதன்படி, அந்த வீரர்களுக்கு விதிக்கப்பட்ட 12 மாத காலத் தடை உறுதி செய்யப்பட்டாலும், அவர்கள் தங்களது கிளப் அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2027 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் வியட்நாமுக்கு எதிராக விளையாட இந்த வீரர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறி, அனைத்து கால்பந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட FIFA தடை விதித்திருந்தது.

ஆனால், தற்போது CAS வழங்கியுள்ள தீர்ப்பின்படி, இந்தத் தடையானது அதிகாரப்பூர்வப் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் வீரர்கள் தங்கள் தொழில்முறைப் பயிற்சியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய வீரர்களான ஃபேகுண்டோ கார்சஸ், ரோட்ரிகோ ஹோல்காடோ, இமானோல் மச்சுக்கா, ஜோவா ஃபிகியூரிடோ, கேப்ரியல் பால்மெரோ, ஜோன் இராசாபால் மற்றும் ஹெக்டர் ஹெவல் ஆகியோருக்குப் போட்டிகளில் விளையாடுவதற்கான 12 மாத காலத் தடை  முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே அவர்கள் இடைக்காலத் தடையை அனுபவித்த காலமும் இதில் கருத்தில் கொள்ளப்படும் என நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.அதேவேளையில், இந்த மோசடி விவகாரத்தில் மலேசியக் கால்பந்து சங்கத்திற்கு (FAM) விதிக்கப்பட்ட சுமார் 1.8 மில்லியன் ரிங்கிட் (350,000 CHF) அபராதம் நியாயமானது எனத் தெரிவித்துள்ள CAS, அதனை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

FAM தனது நிர்வாகக் குறைபாடுகளை ஒப்புக்கொண்ட போதிலும், அபராதத் தொகையைக் குறைக்கக் கோரி முன்வைத்த கோரிக்கையை நடுவர் மன்றத் தலைவர் லார்ஸ் ஹிலிகர் தலைமையிலான குழு நிராகரித்தது.இந்த மேல்முறையீட்டின் போது, வீரர்கள் தரப்பில் தாங்கள் நேரடியாக ஆவணங்களை மாற்றவோ அல்லது மோசடி செய்யவோ இல்லை என்றும், FAM கேட்டுக் கொண்ட ஆவணங்களை மட்டுமே வழங்கியதாகவும் வாதிடப்பட்டது.

இருப்பினும், ஒட்டுமொத்த மோசடியில் வீரர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு இருப்பதை உறுதி செய்த CAS, அவர்களுக்குப் போட்டித் தடையை மட்டும் தண்டனையாக வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வியட்நாமுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றபோது இந்த வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் தகுதி குறித்த ஆவணங்கள் போலியானவை என FIFA கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை வெடித்தது.

தற்போது வெளியாகியுள்ளது சுருக்கமான தீர்ப்பு மட்டுமே என்றும், விரிவான தீர்ப்பு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் CAS தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.