கோலாலம்பூர், டிச 26- ஹரிமாவ் மலாயா தேசிய அணியின் ஏழு மரபுவழி வீரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடி குற்றச்சாட்டு குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) இயக்குநர் ருஸ்டி முகமட் ஈசா கூறுகையில், மோசடி நோக்கத்திற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கும் குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 468இன் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு உதவ இதுவரை இரண்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார் என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஹரிமாவ் மலாயா தேசிய அணியின் ஏழு மரபுவழி வீரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடி குற்றச்சாட்டு குறித்து மலேசிய கால்பந்து சங்கம் (FAM) நேற்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
முன்னாள் தலைமை நீதிபதி எம்.டி. ராவ்ஸ் ஷரிப் தலைமையில் நடைபெற்ற சுயாதீன விசாரணைக்குழுவின் (IIC) சமீபத்திய விசாரணைக்குப் பிந்தைய பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக FAM இடைக்காலத் தலைவர் முகமட் யூசோப் மாஹாடி நேற்று தெரிவித்தார்.
போலி ஆவணங்களின் தோற்றம் மற்றும் அதற்குப் பொறுப்பான தரப்பினரை அதிகாரிகள் விசாரிக்க ஏதுவாக, காவல்துறை புகார் அளிக்குமாறு டிசம்பர் 16 அன்று IIC, FAM-க்கு பரிந்துரைத்தது.
கடந்த மாதம், சம்பந்தப்பட்ட ஏழு மரபுவழி வீரர்களின் ஆவண மோசடி குறித்து மலேசிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று FIFA கூறியது. மோசடி என்பது 'பெரும்பாலான அதிகார வரம்புகளின் கீழ்' ஒரு குற்றம் என்றும் அது வலியுறுத்தியது.
ஜூன் 10 அன்று வியட்நாமுக்கு எதிராக நடைபெற்ற 2027 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன், வீரர்களின் தகுதியை உறுதிப்படுத்த போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக, உலக கால்பந்து நிர்வாக அமைப்பு செப்டம்பரில் FAM மற்றும் ஏழு மலேசிய மரபுவழி வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்தது.


