சுயமாகத் தயாரித்த துப்பாக்கிச் சூடு: 10 வயது சிறுவன் காயம், அண்டை வீட்டுக்காரர் கைது

5 மார்ச் 2026, 8:12 AM
சுயமாகத் தயாரித்த துப்பாக்கிச் சூடு: 10 வயது சிறுவன் காயம், அண்டை வீட்டுக்காரர் கைது

சுக்காய், மார்ச் 5: திரங்கானு, பெல்டா செபெராங் தாயோர் பகுதியில் நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன், அண்டை வீட்டுக்காரர் சுட்ட காற்றுத் துப்பாக்கி (Air gun) குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

நேற்று மாலை 3.45 மணியளவில் தனது அண்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், முதுகின் இடது பக்கத்தில் பலத்த வலி ஏற்பட்டு அழுததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுவனின் தாய் சோதித்துப் பார்த்தபோது, முதுகில் சிவந்த தழும்பையும் வீட்டின் முன் ஒரு சிறிய இரும்பு குண்டையும் கண்டெடுத்ததாகக் கெமாமான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முகமட் ராசி ரோஸ்லி தெரிவித்தார்.

 பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், சந்தேகத்தின் அடிப்படையில் அண்டை வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின் போது, தனது வீட்டின் ஜன்னல் வழியாக 40 மீட்டர் தொலைவில் உள்ள அண்டை வீட்டை நோக்கி ஒருமுறை சுட்டதை அந்த நபர் ஒப்புக்கொண்டார். ஆனால், அது சிறுவன் மீது படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

சோதனையில், அந்த நபரிடமிருந்து 123 செ.மீ மற்றும் 107 செ.மீ நீளமுள்ள இரண்டு சுயமாகத் தயாரித்த காற்றுத் துப்பாக்கிகள் மற்றும் ஒன்பது இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறவைகளைச் சுடுவதற்காக ஒரு துப்பாக்கியை இணையம் வழியாக வாங்கியதாகவும், மற்றொன்றைத் தாமாகவே தயாரித்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 மேலும், நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அந்த நபர் 'மார்பின்' (morphine) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதோடு, அவருக்கு எதிராகப் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான 10 பழைய குற்றப் பதிவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

காயமடைந்த சிறுவன் கெமாமான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், சந்தேக நபர் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் பிரிவு 8 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 324-இன் கீழ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.