ஷா ஆலம், மார்ச் 3: பூச்சோங் பெர்மாய் பூங்காவில் குப்பைகள் குவிக்கப்படுவதாகப் பெறப்பட்ட பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, அங்கு வெளிநாட்டினருக்குச் சொந்தமான இரண்டு மூன்று சக்கர மிதிவண்டிகளைச் சுபாங் ஜெயா மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது.
மேலும் அங்கு உள்ள பிளாக் A மற்றும் பிளாக் F ஆகிய பகுதிகள் மறுசுழற்சி பொருட்களைப் பிரித்தெடுக்கும் இடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட பொருட்களை அந்த வாகனங்கள் மூலம் சேகரிக்கும் நடவடிக்கையே இதற்குக் காரணம் என்றும், இதில் அப்பகுதி குடியிருப்பாளர்களுக்குத் தொடர்பில்லை என்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமலாக்க நடவடிக்கையாக அந்த இரண்டு மூன்று சக்கர மிதிவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தப் பகுதியில் வணிக நடவடிக்கைகளிலோ அல்லது பொருட்கள் சேகரிப்பிலோ மீண்டும் ஈடுபடக்கூடாது என வாய்மொழி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பொது அமைதியையும் தூய்மையையும் உறுதி செய்ய இத்தகைய கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தொடரும் என சுபாங் ஜெயா மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.








