மோசடியில் அரசு ஓய்வூதியர் சுமார் RM10,000 மதிப்புள்ள நகைகளை இழந்தார்

22 பிப்ரவரி 2026, 2:26 AM
மோசடியில் அரசு ஓய்வூதியர் சுமார் RM10,000 மதிப்புள்ள நகைகளை இழந்தார்

கோலாலம்பூர், பிப் 22: ஜாலான் பண்டான் பிரிமா பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நேற்று நடந்த மோசடி மற்றும் மயக்கி ஏமாற்றும் (pukau) சம்பவத்தில், அரசு ஓய்வூதியர் ஒருவர் சுமார் RM10,000 மதிப்புள்ள நகைகளை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவரை காவல்துறை தேடி வருகின்றது.

காலை 11 மணியளவில் நடந்த சம்பவத்தில், 70 வயதான பாதிக்கப்பட்டவரை ஒரு தம்பதியினரும் இந்தோனேசியர் என்று நம்பப்படும் ஒரு பெண்ணும் உதவி கேட்பது போல் நடித்து ஏமாற்றியதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.

“சந்தேக நபர்கள் RM300,000 மதிப்புள்ள லாட்டரி சீட்டு தங்களிடம் இருப்பதாகவும், அடையாள அட்டை இல்லாத காரணத்தால் அதை மாற்றிக்கொள்ள முடியாததாகவும் கூறி, அதை மாற்ற உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்டவரிடம் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலாக வெகுமதி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

“அந்த வெளிநாட்டு பெண், பாதிக்கப்பட்டவரின் கையைப் பிடித்ததன் பின்னர், அவர் மயக்கமடைந்தது போல் உணர்ந்துள்ளார்,” என கைருல் அனுவார் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அதன்பின்னர், பாதிக்கப்பட்டவர் ஒரு புரோட்டான் வாஜா காரில் அழைத்துச் செல்லப்பட்டார். வாகனத்தில் இருக்கும் போது, லாட்டரி சீட்டு ஒரு காசோலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதை பாதிக்கப்பட்டவரே பணமாக்க வேண்டும் என்றும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், காசோலை பணமாக்கும் போது தப்பிச் செல்லாமல் இருக்க உத்தரவாதமாக RM30,000 முன்பணம் (cagaran) வழங்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

“கையில் பணம் இல்லாத காரணத்தால், பாதிக்கப்பட்டவர் சுமார் RM10,000 மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் வளையலை முன்பணமாக வழங்கினார்.

“பின்னர் காசோலையை பணமாக்க வங்கிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அந்தப் பெண் வாகனத்திலிருந்து இறங்கியவுடன், அனைத்து சந்தேக நபர்களும் தப்பிச் சென்றனர்,” என்றார்.

இந்த வழக்கு மோசடி குற்றத்திற்காக மலேசிய தண்டனைச் சட்டப் பிரிவு 420ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.