புத்ராஜெயா, பிப் 27 – தேசியப் பல்கலைக்கழகத்தின் (UKM) நிர்வாக ஆளுகை மற்றும் நிதி மேலாண்மை முறைகேடுகள் தொடர்பான புகார்கள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) அடுத்த வாரம் தனது ஆரம்பக்கட்ட விசாரணையைத் தொடங்கும். இந்த விவகாரங்கள் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் தேசியத் தணிக்கையாளர் அறிக்கையில் (LKAN) சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
நிர்வாகத்தில் காணப்படும் பலவீனங்கள், ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், கையாடல் போன்ற குற்றவியல் கூறுகள் அல்லது ஆணையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட சட்ட மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என்று SPRM இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை எந்தவொரு தரப்பினருக்கும் பாரபட்சமின்றி, தொழில்முறை ரீதியாகவும், சுதந்திரமாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் வலியுறுத்தியது.
"மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2009 சட்டத்தின் கீழ் அல்லது தொடர்புடைய பிற சட்டங்களின் கீழ் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைத் தக்கவைக்கவும், பொது நிதிகள் வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும், பொறுப்புடனும் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதில் SPRM உறுதியாக உள்ளது என்றும் அது மேலும் கூறியது.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசியத் தணிக்கையாளர் அறிக்கை, மாணவர் கட்டணம் வசூலிப்பதிலும் பல்கலைக்கழக செலவினங்களிலும் UKM கடுமையான முறைகேடுகளையும் நிர்வாக ஆளுகை மீறல்களையும் எதிர்கொண்டதாக வெளிப்படுத்தியது.
அதன்படி, அங்கீகரிக்கப்படாத தரப்பான B-5-1788 கூட்டுறவுக் கழகம், மாணவர்களிடமிருந்து RM50.74 மில்லியன் கட்டணத்தை வசூலித்துள்ளது. இதில் கல்வி முதுகலை பட்டப்படிப்புக்கு (SPEND) RM3.53 மில்லியனும், கல்வி பட்டயப் படிப்புக்கு (DPLI) RM47.21 மில்லியனும் அடங்கும்.
மேலும், B-5-1788 கூட்டுறவுக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மாணவர் கட்டண வருவாயான RM32.36 மில்லியனில், ஊழியர் சேமநிதி வாரியம் (KWSP), தேசிய உயர் கல்வி நிதி வாரியம் (PTPTN) மற்றும் eKewangan மூலம் UKM பெற்ற RM0.87 மில்லியன், பல்கலைக்கழகத்தின் மாணவர் கட்டண வருவாயாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
SPEND மற்றும் DPLI மாணவர்களிடமிருந்து கூட்டுறவுக் கழகத்தால் வசூலிக்கப்பட்ட RM21.02 மில்லியன் கட்டணம், 31 முதல் 291 நாட்கள் வரை தாமதமாக UKM-மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
UKM நிர்வாக ஆளுகை, நிதி முறைகேடுகள்: அடுத்த வாரம் விசாரணையைத் தொடங்குகிறது SPRM
27 பிப்ரவரி 2026, 8:28 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




