புக்கிட் மெர்தாஜாம், பிப். 27 – அதிகாரிகளின் அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகளைப் பதப்படுத்தி வந்த ஓர் ஆலையைக் காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இங்குள்ள சுங்கை லெம்புவில் கடந்த பிப். 24-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், பல்வேறு இயந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் மணிகள் உட்பட மொத்தம் ரிம 2.432 மில்லியன் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், பினாங்கு சுற்றுச்சூழல் துறையுடன் (JAS) இணைந்து 'ஓப்ஸ் தாரிங் ஆல்பா 5' என்ற நடவடிக்கையை மேற்கொண்டதாகப் பொதுப் பணிப் படை (பிஜிஏ) வடக்கு பிரிகேட் தளபதி, எஸ்ஏசி பல்வீர் சிங் தெரிவித்தார்.
"ஆலையின் உரிமையாளர் என்று நம்பப்படும் 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சோதனையின் போது, கழுவும் இயந்திரங்கள், எக்ஸ்ட்ரூடர் இயந்திரம், பதப்படுத்தப்படாதப் பிளாஸ்டிக் அடங்கிய 120 மூட்டைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் மணிகள் கொண்ட 100 மூட்டைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன," என்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த ஆலை 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், சுற்றியுள்ள குறைக்கடத்தி (semiconductor) தொழிற்சாலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பெற்று வந்ததாகவும் பல்வீர் சிங் கூறினார்.
இந்த ஆலையில் பதப்படுத்தப்படும் பிளாஸ்டிக் மணிகள், பிளாஸ்டிக் சார்ந்த பொருள்களைத் தயாரிப்பதற்காக அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
இந்த வழக்கு பினாங்கு சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974-இன் பிரிவு 34A-இன் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
- பெர்னாமா





