ஷா ஆலாம், பிப் 26- மக்களின் குறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதோடு, மாநகரசபை உறுப்பினர்களுடன் நேரடியாகக் களத்தில் இறங்கி தீர்வுகளுக்கு வழிவகுப்பதில் மீடியா சிலாங்கூர் நிறுவனம் ஒரு முன்னோடி ஊடகமாகத் திகழ்கிறது.
கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK) உறுப்பினர் டேனிஷ் ஹைருடின், மீடியா சிலாங்கூர் தலைமைச் செயல்முறை அதிகாரி முகமது ஃபரீடைச் சந்தித்தபோது, மக்களின் குரலைப் பிரதிபலிப்பதில் இந்த ஊடகத்தின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார்.
மீடியா சிலாங்கூரின் பலம் என்பது வெறும் செய்திகளைத் தொகுப்பதோடு நின்றுவிடாமல், களப்பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று மக்களின் உண்மையான இடர்ப்பாடுகளைத் துணிச்சலுடன் கண்டறிவதில் அடங்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மாநகரசபை உறுப்பினர்களுடன் இணைந்து ஊடகவியலாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொள்வதால், செய்திகளின் துல்லியம் அதிகரிப்பதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேல்நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.
அங்காத்தான் மூடா கெடிலான் (AMK) தகவல் பிரிவுத் தலைவருமான டேனிஷ், மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே ஒரு 'முன்னணிக் களப்பணியாளராக' இருந்து செய்திகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதைத் தடுப்பதில் இந்த ஊடகம் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார்.
மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், அடிமட்ட மக்களின் ஆதங்கங்களை அப்படியே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதே மீடியா சிலாங்கூரின் தனிச்சிறப்பாகும்.
இந்தச் சந்திப்பின் போது, சமூகப் பொறுப்புணர்வுடன் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் 140 பேரீச்சம்பழப் பெட்டிகளை அவர் அன்பளிப்பாக வழங்கித் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.




