ஷா ஆலம், பிப் 20: ரமலான் மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா மசூதியில் பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி (bubur lambuk) வழங்கினார்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில முஃப்தி டத்தோ அன்ஹார் ஓபிர் மற்றும் மசூதியின் தலைமை இமாம் டத்தோ முகமட் ஃபர்ஹான் விஜயா ஆகியோரும் கலந்து கொண்டனர். மசூதி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், 25-ஆம் தேதி வரை தினமும் அசர் தொழுகைக்குப் பிறகு 1,300 கொள்கலன்களில் நோன்பு கஞ்சி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது.
இந்த புனிதமான நோன்பு மாதத்தில் இத்தகைய நற்செயல்கள் அதிக ஆசீர்வாதங்களைத் தரும் என்று அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார். "ரமலான் காலத்தில் மசூதிகள் மற்றும் சூராவ் பகுதிகளில் நடைபெறும் இத்தகையச் செயல்பாடுகளை மாநில அரசு வரவேற்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், "சிரமங்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள், மசூதிகளில் ஏற்பாடு செய்யப்படும் நோன்பு திறக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, அங்கு வழங்கப்படும் உணவுகளையும் நோன்பு கஞ்சியையும் பெற்றுப் பயனடையலாம்," என்று அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.


