ஷா ஆலம், பிப் 20: குவாந்தன், செராதிங் டமாய் வீடமைப்பு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சியாக இருக்கும் 15 வயது இளைஞன் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், ஆலோசனை அமர்வுக்கு உட்படுத்தத் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
குவாந்தான் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் (IPD) அந்த இளைஞனுடன் குவாந்தான் சமூக நலத் துறை (JKM) அதிகாரிகள் நேற்று ஒரு சந்திப்பை நடத்தியதாக JKM இயக்குநர் கைருல் அம்ரி அகமட் தெரிவித்தார். அந்த இளைஞனின் தந்தையும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.
"சந்திப்பின் அடிப்படையில், அந்த இளைஞன் இன்னும் அதிர்ச்சி நிலையில் இருப்பதாகவும், ஆலோசனை அமர்வுக்குத் தயாராக இல்லை என்றும் தெரிய வந்தது.
"இதற்கிடையில், தனது மகனை அமைதிப்படுத்த பெல்டா நெராம், கெமாமன், திராங்கானுவிற்கு அழைத்துச் செல்ல அவரின் தந்தை முடிவு செய்துள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாந்தான் சமூக நலத் துறை பின்னர் வழக்கை கெமாமன் சமூக நலத் துறைக்கு தொடர் நடவடிக்கைக்காகப் பரிந்துரைக்கும் என கைருல் அம்ரி கூறினார். கெமாமன் ஜே.கே.எம் சம்பந்தப்பட்ட குடும்பத்தை ஆதரிக்கத் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இளைஞர் காலை 7 மணியளவில் வாக்குவாதத்தைக் கேட்டதாகவும், பின்னர் சமையலறையில் தனது தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட உடனே தனது மாமாவிடம் உதவி கோரியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


