ஷா ஆலம், பிப் 19 — நோன்பு மாதத்தை முன்னிட்டு 'MySave Food' @ Bazar Ramadan 2026 திட்டத்தை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தொடரும். இத்திட்டம் உணவு வீணாவதைக் குறைத்து, தேவைப்படுபவர்களுக்கு உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் பிப்ரவரி 23 முதல் மார்ச் 13 வரை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை மேற்கொள்ளப்படும். இவ்வாண்டு 'MySave Food' @ Bazar Ramadan திட்டத்தில் பங்கேற்க ஐந்து ரமலான் பஜார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, அவை பிரிவு 13, பிரிவு 17, பிரிவு 19, பிரிவு 28 மற்றும் பிரிவு U16 ஆகும்.
“மேலும், இத்திட்டம் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் உணவுக் கழிவுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாக்க உதவுகிறது.
"ரமலான் பஜாரில் உள்ள வர்த்தகர்கள், விற்கப்படாமல் ஆனால், நல்ல நிலையில் இருக்கும் உணவுகளை தன்னார்வலர்களிடம் ஒப்படைப்பார்கள்," என்று தெரிவிக்கப்பட்டது.
சேகரிக்கப்பட்ட அனைத்து உணவுகளும் பதிவு செய்யப்பட்டு, எடைபோட்டு, லேபிளிடப்படும். பின்னர், சூராவ், மசூதிகள், குறைந்த விலை பிளாட்கள் மற்றும் பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் விடுதிகள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த திட்டத்திற்காக எம்பிஎஸ்ஏ டாருல் எஹ்சான் வசதிகள் மேலாண்மை துணை நிறுவனம் (DEFM) மற்றும் டேனாய் ஆலம் குடியிருப்பாளர்கள் சங்கம் (DARA) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
ரமலான் பஜார் வியாபாரிகளின் ஊக்கமளிக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, 2021 முதல் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக எம்பிஎஸ்ஏ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில், 7,717 கிலோ உணவை எம்பிஎஸ்ஏ வெற்றிகரமாக சேகரித்தது குறிப்பிடத்தக்கது.


