ஷா ஆலம், பிப் 19: கோலாலம்பூர் மாநகரத்தின் பெருமைக்குரிய அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு மையமாகவும் விளங்கும் டத்தாரான் மெர்டெக்கா பகுதியில் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அந்த இடத்தின் பாரம்பரிய மதிப்பு, தூய்மை மற்றும் நற்பெயரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத வியாபாரிகளிடமிருந்து பொருட்களை வாங்க வேண்டாம் என்றும், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, டத்தாரான் மெர்டெக்கா பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட குளிர்பானக் கொள்கலன்களை சட்ட விதிகளின்படி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் அந்தப் பகுதியில் ஒரு சந்தை போன்ற சூழல் உருவாகியிருப்பதாகப் புகைப்படங்கள் பரவி, பொதுமக்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
டத்தாரான் மெர்டெக்கா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.


