ரமலான் மற்றும் ஹரி ராயா - விலை உயர்வைக் கட்டுப்படுத்த 'ஓப்ஸ் பாந்தாவ் 2026' தொடக்கம்

16 பிப்ரவரி 2026, 8:34 AM
ரமலான் மற்றும் ஹரி ராயா - விலை உயர்வைக் கட்டுப்படுத்த 'ஓப்ஸ் பாந்தாவ் 2026' தொடக்கம்

கோலாலம்பூர், பிப் 16- எதிர்வரும் ரமலான் மற்றும் ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விலையை உறுதி செய்ய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) 'ஓப்ஸ் பாந்தாவ் 2026' (OPS Pantau) நடவடிக்கையை அமல்படுத்துகிறது.

இந்தச் சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 20-ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் ஒரு மாத காலத்திற்கு தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

சர்க்கரை, கோழி, முட்டை, சமையல் எண்ணெய் மற்றும் கோதுமை மாவு போன்ற அடிப்படைத் தேவைகளின் விலைகள் இக்காலகட்டத்தில் அநியாயமாக உயர்த்தப்படுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ரமலான் பஜாரில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பலகாரங்கள் செய்வதற்குத் தேவையான மூலப் பொருட்களின் விலைகளும் இந்த கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் கீழ், அமலாக்க அதிகாரிகள் ரமலான் பஜார்கள், பொதுச் சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொள்வார்கள்.

இது தவிர, ஆன்லைன் விற்பனைத் தளங்களிலும் விலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

விலைக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறும் மற்றும் அநியாயமாக லாபம் ஈட்டும் வணிகர்களுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டின் விலைக்கட்டுப்பாடு மற்றும் லாபமீட்டல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக, பொருட்களுக்கு விலைப் பட்டியல் வைக்கத் தவறுதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை மீறி விற்பனை செய்வோர் மீது பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் தங்களின் புகார்களை வாட்ஸ்அப் (019-848 8000), கட்டணமில்லா அழைப்பு எண் (1-800-886-800) அல்லது மின்னஞ்சல் (e-aduan@kpdn.gov.my) வழியாக அமைச்சிடம் சமர்ப்பிக்கலாம்.

நுகர்வோர் விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் பண்டிகைக் காலங்களில் ஏற்படும் தேவையற்ற விலை உயர்வைத் தவிர்க்க முடியும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.