ஜகார்த்தா: உணவுப் பாதுகாப்பு, பசுமைப் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் இரு நாடுகளின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆய்வு ஒத்துழைப்பை மலேசியாவும் இந்தோனேசியாவும் தொடரவுள்ளன.
இங்கு தமது இந்தோனேசியப் பிரதிநிதியான பேராசிரியர் பிரையன் யூலியார்டோவுடனான சந்திப்பின்போது இது குறித்து விவாதிக்கப்பட்டதாக உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதர் தெரிவித்தார்.
"அடையாளம் காணப்பட்ட துறைகளை மேம்படுத்துவதற்காக மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்க நாங்கள் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
"இரு நாடுகளிலும் உள்ள நிபுணத்துவத்தை நாம் தனிமைப்படுத்தவோ அல்லது வீணடிக்கவோ கூடாது," என்று அந்தச் சந்திப்பிற்குப் பிறகு பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை ஜகார்த்தா வந்தடைந்த ஸம்ரி, இந்த ஒத்துழைப்பில் மலேசியா-இந்தோனேசியா கல்வி கூட்டமைப்பின் (KAMI) கீழ் உள்ள ஆய்வு நிபுணர்கள் தவிர, இரு நாடுகளிலும் அடையாளம் காணப்பட்ட பல உயர் கல்வி நிறுவனங்களும் ஈடுபடும் என்றார்.
"எடியுகேஷன் மலேசியா பிரதிநிதிகள் இங்குள்ள உயர் கல்வி தலைமை இயக்குநருடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளனர்."
"இதன் முடிவுகள் இரு நாடுகளின் கல்விப் பிரிவுக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும். ஆய்வுப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது பின்னர் அடையாளம் காணப்படும்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஸம்ரி போகோர் விவசாயக் கழகத்திற்கும் வருகை தந்து, அங்குள்ள மலேசிய மாணவர்களைச் சந்தித்தார். அத்துடன், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைகளில் கூட்டாக மேம்படுத்தக்கூடிய அம்சங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.







