கோலாலம்பூர், பிப் 9 — அதிக அல்லது போதுமான வருமானம் உள்ள நிலையில் தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுபவர்களுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்குப் பயணக் கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் படிப்பை முடித்த பட்டதாரிகள் அல்லது இன்னும் வருமானம் இல்லாதவர்களுக்குக், குறிப்பாக B40 மற்றும் M40 குழுக்களில் உள்ளவர்களுக்கு இந்த கடுமையான நடவடிக்கை பொருந்தாது என்று உயர்கல்வி துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலிம் கூறினார்.
"சில அளவுகோல்களைப் பூர்த்தி செய்பவர்கள் மற்றும் அதிக அல்லது போதுமான வருமானம் உள்ளவர்கள் மட்டுமே பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள்" என்று அவர் மாரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் அப்துல் முத்தலிப்பின் கேள்விக்குப் பதிலளித்தார்.
தற்போது, தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களில் சுமார் 0.7 சதவீதம் பேர் இந்தப் பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்கள் என்று ஆடம் மேலும் கூறினார்.
பட்டதாரிகள் மீதான சுமையைக் குறைக்க, பட்டப்படிப்புக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான 12 மாதக் கால அவகாசம் வழங்கபப்டுகிறது. இது அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வாய்ப்பளிக்கிறது.
திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் 60 வயது வரை தங்கள் நிதித் திறனைப் பொறுத்து கடன் அட்டவணையை மறுசீரமைக்கலாம்.
இன்றுவரை, நாடு முழுவதும் 4.26 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு உதவ மொத்தம் RM77.5 பில்லியன் தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


