வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: துணையமைச்சர் ஆர்.யுனேஸ்வரன்

9 பிப்ரவரி 2026, 9:17 AM
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: துணையமைச்சர் ஆர்.யுனேஸ்வரன்

புத்ரா ஜெயா, பிப் 9 - அனுமதியின்றி கட்டப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்ப்பதில் மடாணி அரசு நியாயமாகவும் சமநிலையான அணுகுமுறையையும் பின்பற்றுவதாகத் தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவதற்காகச், சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தல நிர்வாகங்களுக்குக் கால அவகாசம் வழங்கி, நுணுக்கமாக இந்த விவகாரத்தை அரசு கையாளுவதை அவர் உறுதிப்படுத்தினார்.

அதே நேரத்தில், உடனடி நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயல்வோரைக் கட்டுப்படுத்த அரசு உறுதியாகச் செயல்படும் என்றும் யுனேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறினார்.

நிலம் தொடர்பான விவகாரங்களில் குறிப்பாகப், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், கோயில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஒரே சட்டத்திற்கும் ஒரே வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டவை என்பது அடிப்படை கோட்பாடு என அவர் வலியுறுத்தினார்.

இப்பிரச்சனைகளுக்கு மோதலின் மூலம் அல்ல; மாறாகக், கலந்துரையாடல் மற்றும் உரிய நடைமுறைகள் வழியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என அவர் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மலேசியா புரிதல், மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் செயல்படும் நாடு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று யுனேஸ்வரன் கூறினார்.

நீதி, இன ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில், நாட்டின் நலனுக்காகத் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை முழுத் திறனுடன் நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாட்டில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு உதவத் தயார் என வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறிய கூற்றைத் தாம் வரவேற்பதாகவும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.

கூடிய விரைவில் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை இந்தச் சிக்கலுக்கு நிரந்த தீர்வைக் காணும் என்ற எதிர்ப்பார்ப்பு தமக்கு இருப்பதாகவும் யுனேஸ்வரன் கூறினார்.

இனி வரும் காலங்களில் உரிய நிலம், முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதி கிடைத்த பின்னரே வழிப்பாட்டுத் தலங்களை நிறுவ முடியும் என்பதை அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.