தேசிய நூலகத்திற்குத் துணை அமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன் வருகை: நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய பொலிவு

23 ஜனவரி 2026, 7:58 AM
தேசிய நூலகத்திற்குத் துணை அமைச்சர் மாண்புமிகு ஆர். யுனேஸ்வரன் வருகை: நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய பொலிவு

கோலாலம்பூர், ஜன 23- மலேசியத் தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் மாண்புமிகு யுனேஸ்வரன் ராமராஜ், கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள மலேசியத் தேசிய நூலகத்திற்கு (PNM) இன்று தனது முதல் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டார்.

நாட்டின் அறிவுத்திறன், சிந்தனை மற்றும் அடையாளத்தைக் கட்டமைக்கும் முக்கிய நிறுவனமாகத் திகழும் இந்நூலகத்தின் செயல்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

1992-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடம், 2005-ஆம் ஆண்டு தேசிய பாரம்பரிய சட்டத்தின் கீழ் தேசியப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு முதல் புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நூலகம், 2025-ஆம் ஆண்டில் நவீன வசதிகள் மற்றும் பயனர் நட்பு சூழலுடன் மீண்டும் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனது வருகையின் போது, நூலகத்தின் 17 முக்கியப் பணிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சமூக, பொது மற்றும் கிராமப்புற நூலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் அறிவுசார் திட்டங்கள் குறித்து துணை அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் டிஜிட்டல் மயமாக்கல் இலக்கிற்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் விளையாட்டு முறைகளை நூலக சேவைகளில் புகுத்தியுள்ளதைப் பாராட்டிய துணை அமைச்சர், தாமும் சில நவீன டிஜிட்டல் விளையாட்டுகளைச் சோதனை செய்து பார்த்தார்.

மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இங்குள்ள 'பாட்காஸ்ட்' (Podcast) ஒலிப்பதிவு ஸ்டுடியோ போன்ற நவீன வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

தற்போது நூலகத்தில் உள்ள அரிய நூல்களைக் காகித வடிவில் மட்டுமின்றி, 'QR Code' மூலமாகவும் எளிதில் வாசிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய நவீன மாற்றங்கள் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.