புத்ராஜெயா, பிப் 3: ஜொகூரில் பெண் பயணி ஒருவரிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்ட இ-ஹெய்லிங் ஓட்டுநரின் பொதுச் சேவை வாகன உரிமத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சு, சாலைப் போக்குவரத்துத் துறைக்கு (JPJ) உத்தரவிட்டுள்ளது.
இந்த உரிம ரத்து நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் இனி எந்தவொரு இ-ஹெய்லிங் தளத்திலும் ஓட்டுநராகப் பணியாற்ற முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். "பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் போக்குவரத்து அமைச்சு பொறுத்துக்கொள்ளாது. பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக இருப்பதோடு, குற்றவாளி மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்குமாறு Grab உட்பட அனைத்து இ-ஹெய்லிங் நிறுவனங்களையும் நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் வாயிலாக அழைக்கவுள்ளதாக லோக் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு காணொளியைத் தொடர்ந்து, ஜொகூர் பாருவில் பெண் பயணி ஒருவரிடம் பாலியல் தொல்லை கொடுத்த அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநரை அடையாளம் காணும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பயணியால் எடுக்கப்பட்டதாக நம்பப்படும் அந்தக் காணொளியில், ஓட்டுநரின் பின்னணி குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.


