ஷா ஆலாம், பிப் 3- சிலாங்கூர் மாநில அளவில் செயல்படும் 54 இந்து ஆலயங்களுக்கு 579,000 ரிங்கிட் மானியத் தொகையை அதன் ஆலயத் தலைவர், பொறுப்பாளர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதிநிதிகளிடம் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி ஒப்படைத்தார் என்று மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.
பத்துமலை முருகன் திருத்தலத்திற்குச் செல்லும் நுழை வாயிலின் அருகில் மேம்பாலத்திற்கு கீழ் மாநில அரசின் ஏற்பாட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் உள்ளூர் கலைஞர்களின் பக்திப் பரவசத்துடன் பாடிய பக்திப் பாடல்கள் நிகழ்ச்சி ஊடே மேடைக்கு அழைக்கப்பட்டிருந்த ஆலயப் பொறுப்பாளர்களிடம் மந்திரி புசார் அமிருடின் மானியத்தை வழங்கினார் என்று அவர் கூறினார்.
மாநில அளவில் செயல்படும் இந்து ஆலயங்கள் வளர்ச்சிக்கு இந்த மானியம் பயன்படும் என்று பாப்பா ராய்டு தெரிவித்தார். அதே வேளையில், இவ்வருட இறுதிக்குள் மேலும் ஒரு கட்டமாக விடுப்பட்டுள்ள ஆலயங்களுக்கு மானிய உதவித் தொகை முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஆலய மானியம் வழங்கப்படும் நிகழ்ச்சியில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் வீரமான், சிலாங்கூர் மாநில நகர்புற மேம்பாடு மற்றும் ஒருமைப்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹஜி ரிசாம் இஸ்மாயில், செலாயாங் நகராண்மை கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


