செராஸ், ஜன 28- பாலாக்கோங் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் சாலைகளை மறுசீரமைக்கும் பணிகளுக்காக, கடந்த ஆண்டு மலேசிய சாலை தகவல் அமைப்பு (MARRIS) நிதியிலிருந்து மொத்தம் 4 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மோசமான நிலையில் உள்ள சாலைகள் மற்றும் நீண்டகாலமாகப் பராமரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிச் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக பாலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் தெரிவித்தார்.
பாலாக்கோங் தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன என்றும், அவற்றில் சில பகுதிகளில் உள்ள சாலைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குடியிருப்பாளர்களின் பயண வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இத்தகைய பழைய சாலைகளைத் தரம் உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நேற்று தாமான் தேசா பைடூரி (Taman Desa Baiduri) பகுதியில் நடைபெற்ற சாலைத் தரப் பரிசோதனையின் போது பேசிய அவர், 2025-ஆம் ஆண்டிற்காக பாலாக்கோங் தொகுதிக்கு 4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இது மற்ற தொகுதிகளுக்கு வழங்கப்படும் 3 மில்லியன் ரிங்கிட் நிதியை விட அதிகம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேசா பைடூரி குடியிருப்பாளர் சங்கத் தலைவர் முகமட் அசார் முகமட் நைம் அவர்களும் கலந்துகொண்டார். மேலும், பழைய குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேம்பட்ட சாலை வசதிகளைப் பெறும் வகையில், இந்த ஆண்டு சாலைச் சீரமைப்புப் பணிகளுக்கான கூடுதல் நிதியைக் கோரப் போவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் உறுதியளித்தார்.


