பொது இடத்தில் திடக்கழிவுகளை வீசிய இந்தோனேசியப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சமூக சேவை செய்ய உத்தரவு

23 ஜனவரி 2026, 10:47 AM
பொது இடத்தில் திடக்கழிவுகளை வீசிய இந்தோனேசியப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சமூக சேவை செய்ய உத்தரவு

ஜோகூர் பாரு, ஜன 23 - பொது இடத்தில் திடக்கழிவுகளை வீசிய இந்தோனேசியப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சமூக சேவை செய்ய இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, 2007ஆம் ஆண்டு திடக்கழிவு நிர்வகிப்பு மற்றும் பொது துப்புரவுச் சட்டம், செக்ஷன் 77Aஇன் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி நோர் அசியாதி ஜாஃபார் முன்னிலையில் திடக்கழிவுகளை வீசிய குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 49 வயதான அனிதா லுக்மான் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

அவருக்கு, நீதிமன்றம் 500 ரிங்கிட் அபராதமும், ஆறு மாத காலத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் என்ற அடிப்படையில் ஆறு மணி நேரம் சமூக சேவையை மேற்கொள்ளவும் தீர்ப்பளித்தது.

அபராதத்தை செலுத்தத் தவறினால் 15 நாள்கள் சிறைத் தண்டனையும் சமூக சேவையை மேற்கொள்ளவிட்டால் 2,000-லிருந்து 10,000 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் தேதி நள்ளிரவு 12.41 மணி அளவில் ஸ்துலாங் லாவூட், ஜாலான் இப்ராஹிம் சுல்தானில் சிகரெட் துண்டையும் நீர் பாட்டில்களையும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகள் வீசாமல், பொது இடத்தில் வீசியதாக அனிதா லுக்மான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனிடையே, புல் வெட்டுதல், கால்வாய் மற்றும் கழிவறையைச் சுத்தம் செய்தல், துப்புறவு நடவடிக்கை ஆகியவை விதிக்கப்படும் சமூக சேவை தண்டனைகளில் அடங்கும் என்று இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட திடக்கழிவு நிர்வகிப்பு மற்றும் பொது துப்புறவு அமைப்பு, SWCorp தலைமை செயல்முறை அதிகாரி காலிட் முகமட் குறிப்பிட்டார்.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.