நெகிரி செம்பிலானில் குப்பைகளை வீசியதற்காக SWCorp 190 நோட்டீஸ்களை வழங்கியது

26 பிப்ரவரி 2026, 8:43 AM
நெகிரி செம்பிலானில்  குப்பைகளை வீசியதற்காக SWCorp 190 நோட்டீஸ்களை வழங்கியது

சிரம்பான் பிப் 26 : நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் சிறிய குப்பைகளை வீசிய குற்றத்திற்காக, மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp) பிப்ரவரி 23 வரை மொத்தம் 190 குற்ற அறிவிப்பு நோட்டீஸ்களை (NPK) வழங்கியுள்ளது.

மாநில ஊராட்சி, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைக் குழுத் தலைவர் ஜெ. அருள் குமார் கூறுகையில், அனைத்து நோட்டீஸ்களும் உள்ளூர்வாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார். இதன் மூலம், சம்பந்தப்பட்ட சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஏழு மாநிலங்களில், நெகிரி செம்பிலான் இரண்டாவது அதிகபட்ச நோட்டீஸ்களை வழங்கிய மாநிலமாகத் திகழ்கிறது.

திடக்கழிவு மற்றும் பொதுத் தூய்மை மேலாண்மைச் சட்டம் 2007-இன் கீழ் வழங்கப்பட்ட இந்த நோட்டீஸ்களில், இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு சமூக சேவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்பதையே இது காட்டுகிறது. அபராதங்களின் எண்ணிக்கையில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை, மாறாக பொதுத் தூய்மையின் தரத்தை உயர்த்தி, குற்றங்களைக் குறைப்பதே எங்கள் நோக்கம்," என்று அவர் கூறினார்.

"இது குறித்து முன்னரே தகவல்களும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஊடகங்கள் வழியாக பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்குத் தெரியாது என்ற காரணத்தை மக்கள் கூற முடியாது. எனவே, தூய்மையைப் பேணுவதும், கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசாமல் இருப்பதும் நமது பொறுப்பாகும்," என்று அவர் இங்கு ஒரு ஹோட்டலில் நடைபெற்ற 'SWM காசிஹ் சந்துன் ரமலான் மற்றும் இஃப்தார்' நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருந்த போதிலும், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் சிகரெட் துண்டுகளைப் பொது இடங்களில் வீசுவதே முக்கிய குற்றங்களாகத் தொடர்கின்றன என்று அருள் குமார் கூறினார்.

இதனையடுத்து, பொதுமக்கள் குப்பைகளை மனம் போன போக்கில் வீசுவதைத் தடுக்க, பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், தனியார் நிறுவன உரிமையாளர்கள் தங்கள் வளாகங்களில் குப்பைத் தொட்டிகளை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மற்றொரு நிலவரத்தில், ரமலான் சந்தைகள் உட்பட தங்களின் வியாபாரத் தளங்களை வெளிநாட்டினருக்கு விற்கும் எந்தவொரு வியாபாரியுடனும் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்று நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

தங்கள் சந்தை உரிமத்தை 'அலிபாபா' முறையில் வெளிநாட்டினருக்கு விடும் வியாபாரிகள் அல்லது சந்தை அமைப்பாளர்களுக்கு எதிராக உரிமத்தைத் திரும்பப் பெறுவது மற்றும் அவர்களைக் கரும்பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

"கடந்த ஆண்டு ரமலான் சந்தைகளில் சில வெளிநாட்டினர் வியாபாரம் செய்வதைக் கண்டறிந்தோம். சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மற்றும் அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு அது மீண்டும் நிகழாது என்று நம்புகிறேன். இந்த ரமலான் இணக்கமாக நடைபெறட்டும்," என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.