கோலாலம்பூர், ஜனவரி 22 - மலேசிய தரைப்படையின் (TDM) முன்னாள் தளபதி டான் ஸ்ரீ முகமட் ஹபிசுதீன் ஜந்தான், 2.12 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான சட்டவிரோதப் பணத்தைப் பெற்றதாக இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
இருப்பினும், நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் வாசிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் மறுத்த 58 வயதான முகமட் ஹபிசுதீன், விசாரணையைக் கோருவதாகத் தெரிவித்தார்.
மலேசிய தரைப்படை கொள்முதல் டெண்டர்கள் தொடர்பான பணமோசடி வழக்கில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முதல் தரைப்படைத் தளபதி இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின்படி, அவர் தனது மூன்று வங்கிக் கணக்குகளில் முறையே RM969,000, RM474,850, RM488,550 மற்றும் RM190,000 என மொத்தம் RM2,122,400 சட்டவிரோதப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் கடந்த 2024 பிப்ரவரி 2 முதல் 2025 நவம்பர் 7-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஜாலான் மெலகா, புக்கிட் டமான்சாரா மற்றும் கோலாலம்பூர் மாநகரப் பகுதிகளில் உள்ள மூன்று வங்கிக் கிளைகளில் நடைபெற்றதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் 2001-ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டத்தின் (AMLATFPUAA) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சட்டவிரோதப் பணத்தின் மதிப்பை விட ஐந்து மடங்கு அல்லது 5 மில்லியன் ரிங்கிட், இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த ஜனவரி 7-ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) நடத்திய 'ஒப்ஸ் பாராசிட்' (Ops Parasit) நடவடிக்கையின் கீழ், தரைப்படை டெண்டர் திட்டங்கள் தொடர்பாக இவரும் இவரது இரண்டு மனைவிகளும் கைது செய்யப்பட்டனர்.
அக்டோபர் 2025 முதல் தொடங்கப்பட்ட இந்த விசாரணை, உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாலும் பொதுமக்களின் நலன் கருதியும் மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த வாரம் மலேசிய ஆயுதப்படையைச் சேர்ந்த 23 நபர்கள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இச்சம்பவம் மலேசிய தற்காப்பு அமைச்சு மற்றும் ஆயுதப்படை நல நிதி (TKAT) தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்த விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


