புதுடெல்லி, ஜன 21: உலகப்புகழ் பெற்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் (NASA) மூத்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தனது 27 ஆண்டுகால சாதனைப் பயணத்திற்குப் பிறகு விண்வெளிப் பணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார்.
விண்வெளித் துறையில் பல மைல்கற்களை எட்டியுள்ள 60 வயதான சுனிதா வில்லியம்ஸ், கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெற்றதாக நாசா நேற்று (ஜனவரி 20) வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அவர், புதுடெல்லியில் உள்ள அமெரிக்க மையத்தில் நடைபெற்ற "கண்களில் விண்மீன்கள், கால்களில் பூமி" (Eyes on the Stars, Feet on the Ground) எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வின் போது தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், கடந்த 2024-ஆம் ஆண்டு போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 8 நாட்கள் பயணமாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் 9 மாதங்களாக நீண்ட சவாலான பயணம் குறித்து உருக்கமாகப் பேசினார்.
சுனிதா வில்லியம்ஸின் ஓய்வு குறித்து நாசாவின் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சுனிதா ஒரு முன்னோடித் தலைவர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள், எதிர்காலத்தில் நிலவுக்குச் செல்லும் 'ஆர்டெமிஸ்' (Artemis) திட்டத்திற்கும், செவ்வாய் கிரகப் பயணத்திற்கும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது," என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தீபக் பாண்டியா மற்றும் போனி பாண்டியா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த சுனிதா, தனது கடின உழைப்பால் உலகெங்கிலும் உள்ள இளைய தலைமுறைக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.


