ஐஜேஎம் கார்ப்பரேஷன் விவகாரம்: 55 வங்கி கணக்குகள் முடக்கம்; 1.58 கோடி ரிங்கிட் பறிமுதல் - எம்.ஏ.சி.சி நடவடிக்கை

21 ஜனவரி 2026, 6:57 AM
ஐஜேஎம் கார்ப்பரேஷன் விவகாரம்: 55 வங்கி கணக்குகள் முடக்கம்; 1.58 கோடி ரிங்கிட் பறிமுதல் - எம்.ஏ.சி.சி நடவடிக்கை
ஐஜேஎம் கார்ப்பரேஷன் விவகாரம்: 55 வங்கி கணக்குகள் முடக்கம்; 1.58 கோடி ரிங்கிட் பறிமுதல் - எம்.ஏ.சி.சி நடவடிக்கை

கோலாலம்பூர், ஜன 21- ஐஜேஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் (IJM) நிறுவனத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நேற்று நடத்திய அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து, சுமார் 1.58 கோடி ரிங்கிட் மதிப்புள்ள 55 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

'ஒப்ஸ் ஹார்ட்' (Ops Heart) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் சில தனிநபர்களின் இல்லங்கள் உட்பட நான்கு இடங்கள் சோதனையிடப்பட்டன.

மலேசியாவின் முன்னணி கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான ஐஜேஎம்-மின் உயர்மட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த இருவர் மீது ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிறப்புச் செயல்பாட்டுப் பிரிவு (BOK) மேற்கொண்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக் குளறுபடிகள், கொள்முதல் முறைகேடுகள், நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாடுகளில் சுமார் 250 கோடி ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளைக் குவித்தது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கருத்து தெரிவிக்கையில், 250 கோடி ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஐஜேஎம் நிறுவனத்தின் இரு உயர்மட்ட அதிகாரிகள் உட்பட ஒன்பது பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தச் சோதனையின் போது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான 55 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, இந்த விவகாரத்தில் 'டான்ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட ஒரு முக்கிய அதிகாரியும், நிறுவன ஆலோசகர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதேவேளை, பல கோடி ரிங்கிட் முதலீட்டுப் பரிமாற்றங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய இராச்சியத்தின் (UK) தீவிர மோசடி தடுப்பு அலுவலகமும் (SFO) விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.