ஷா ஆலம், ஜன 20: அடுத்த மாதம் கொண்டாடவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு RM200 மதிப்புள்ள மொத்தம் 25,000 ஜோம் ஷோப்பிங் பெராயான் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் என்று வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் உள்ள 56 மாநில சட்டமன்றங்களிலும் (DUN) குறைந்த வருமானம் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் மொத்தம் RM5 மில்லியன் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகிறது என வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
“வவுச்சர்கள் விநியோகம் தொகுதி அலுவலகங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் தகுதியான பெறுநர்களின் பட்டியலைக் கண்டறிந்து புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதன் மூலம் இந்த வவுச்சர்கள் உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய முடியும்.
சீனப் புத்தாண்டைத் தவிர, இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) முன்முயற்சியின் கீழ் இந்தத் திட்டம், ஐடில்ஃபித்ரி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களிலும் வழங்கப்படும் என்று பாப்பாராய்டு கூறினார்.
மாநில அரசு இந்த ஆண்டு ஜோம் ஷாப்பிங் பெராயன் வவுச்சர் திட்டத்திற்கு RM2 மில்லியன் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மொத்த தொகை RM18.48 மில்லியனாக உயர்ந்தது.
பண்டிகைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளை வாங்க சிலாங்கூரில் உள்ள 92,400 B40 குடும்பங்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கிறது.


